பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 300 -

முனிவரோ மறுபடியும் தவத்தை நாடிப் போகிறார். இவ்வாறு எதை எழுதினாலும் தன்னம்பிக்கையோடு புரட்சி செய்யும் மனப்பான்மையை அவரிடம் காணலாம். துன்பக்கேணி என்னும் கதை இலங்கைத் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் ஒருத்தி பற்றியது. தன்னைக் கெடுத்த மானேஜர் தன்மகளையும் கற்பழித்தான் என அறிந்து, அவனைக் கொலை செய்துவிடுகிறாள் அந்தத் தாய். இவ்வாறு கொடுமையை எதிர்க்கும் பாத்திரங்களையும் அவர் படைத்திருக்கிறார்.

மற்றச் சிறுகதை ஆசிரியர்கள்

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சமுதாய முன்னேற்றம் கருதிச் சில கதைகள் எழுதினார். ‘அன்னையும் பிதாவும்’ என்னும் அவருடைய கதையில், ஏழை அரிஜனன் ஒருவன் படித்துப் பதவி பெற்று உயர்ந்த பிறகு தாய்தந்தையரையும் உடன் பிறந்தவர்களையும் காப்பாற்றவில்லை. அவர்கள் வாடி வருந்த விடுகிறான். ஒரு திருப்பம் ஏற்படுகிறது; தன் குற்றம் உணர்ந்து மனம் நைந்து உருகுகிறான்; துறவியாகிறான். அவருடைய கதைகள் எல்லாம் எளிய நடையில் அமைந்தவை. உத்திகள் கையாண்டு விளையாடாமல், நேரிய முறையில் சுவையாகக் கதை சொல்பவர் அவர். தேவானை என்னும் கதையில், கிராமத்து மங்கை ஒருத்தி நகரத்துக்கு வந்து பிச்சைக்காரியாக வாழும் அவலநிலை எடுத்துக் கூறப்படுகிறது. முகுந்தன் பறையனான கதையில் தீண்டாமையின் கொடுமை விளக்கப்படுகிறது.

கு. ப. ராஜகோபாலன், சிறுகதை உலகில் நிலையான இடம் பெற்றவர்களில் ஒருவர். அவருடைய சிறுகதைகள் குடும்ப வாழ்க்கையின் இன்பதுன்பங்களை நன்றாகப் படம் பிடித்துக் காட்டுவன. உள்ளத்து உணர்ச்சிகளைப் படிப்படியே வடித்துக் காட்டுவதில் வல்லவர் அவர். சென்னையில் பெரிய மருத்துவசாலையில் நோய்வாய்ப்பட்டு மரணத் தறுவாயில் இருந்த கணவனைப்பற்றி வந்த ஒரு தந்தியைப் பெற்றதும், ஊரிலிருந்து புறப்பட்டு வருகிறாள் மனைவி. அவள் ரயிலில் வரும்போது அன்று இரவெல்லாம் படும் துயரத்தையும் துயரத்திற்கு இடையே தோன்றும் சிறு சிறு நம்பிக்கைகளையும் அவர் எடுத்துச் சொல்லிக் கதையை வளர்க்கும் திறன் நெஞ்சை உருக்குவது. ‘விடியுமா’ என்ற தலைப்பில் அந்தக் கதை, கடைசியில் பொழுது விடிவதையும், அந்த மனைவியின் வாழ்க்கை விடியாத நிலைமையையும் ஒருங்கே சொல்லி முடிகிறது. அவர் ஆண் பெண் உறவை எடுத்துக் கூறும் கதைகளிலும் பண்பாட்டின் எல்லைக்குள் நின்று பாத்திரங்களின் மனநிலைகளையும் செயல்களையும் விளக்குகிறார். கிராமத்துச் சூழ்நிலையும் அமைதியான குடும்பத்து இன்ப துன்பமுமே அவருக்குப் பிடித்தவை. எளிய வாழ்க்கை நிலைகளை அழகான கதைகளாகப் படைத்துத்