தந்த அவர், தெருவில் கிடக்கும் எளிய கற்களைக் கொண்டு
அருமையான சிற்பங்களைச் செதுக்கித் தரும் சிற்பி போன்றவர்.
திரை என்ற கதையில் வரும் இளைய விதவை ஒருத்தி, தன் உடன்பிறந்தானின்
வாழ்வு நிறைவேறுவதில் மனமகிழ்ச்சி காண்பதை அழகாகப் படைத்துக் காட்டுகிறார்.
அதுபோன்ற பல கதைகளிலும் அவருடைய நடை சொற்செட்டு உடையதாய் உணர்ச்சிகளைப்
படிப்படியே வளர்த்து உள்ளத்தை உருக்குவதாய் அமைந்துள்ளது.
சிறுகதை வளர்ச்சியில் பெரிய தொண்டு ஆற்றிப் புகழ்பெற்ற
பத்திரிகையாகிய மணிக்கொடியின் ஆசிரியராகப் பணி புரிந்த பி. எஸ். ராமையா,
முந்நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும் மூன்று நாவல்களும், தேரோட்டி மன்னன்,
கைவிளக்கு முதலான நாடகங்களும் இயற்றியவர். அவருடைய ‘நட்சத்திரக் குழந்தைகள்’
புகழ்பெற்ற சிறுகதை. நட்சத்திரம் ஒன்று விழுவதைக் கண்ட குழந்தை, ‘யாரோ ஒருவர்
பொய் சொன்னார்; அதனால் ஒரு நட்சத்திரம் விழுந்தது’ என்று அழுகிறது. பரந்த
உலகியல் அனுபவமும் ஆழ்ந்த பார்வையும் பிறர் இன்ப துன்பங்களை உள்ளவாறு உணரும்
உணர்வும் அவருடைய பல சிறுகதைகளிலும் விளங்குகின்றன. கதைகளும் அழகான கலைவடிவம்
பெற்று அமைந்துள்ளன.
சிறுகதை படைக்கும் முயற்சியில் ‘கல்கியும்’ ஈடுபட்டார்.
‘கேதாரியின் தாயார்’ என்னும் கதையில் மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் அவருடைய
மனப்பான்மை புலப்படுகிறது. பிராமணக் குடும்பத்துக் கொடிய வழக்கங்களையும்
விதவைகள் மொட்டையடித்தல் முதலிய பழக்கங்களையும் வெறுத்துப் புரட்சி செய்யும்
மாந்தர்களைக் கதைகளில் படைத்துள்ளார். சாதி வேற்றுமையில் நம்பிக்கை இல்லாதவர்
அவர். அந்த முற்போக்கு மனப்பான்மையும் சில கதைகளில் காண்கிறோம். வீணை பவானி,
கணையாழியின் கனவு, திருவழுந்தூர் சிவக்கொழுந்து முதலிய சிறுகதைகளும் பலருடைய
நெஞ்சைக் கவர்ந்தவை.
மௌனி சிறுகதை எழுதுவதில் புதுப்போக்கு உடையவர். ஒருமுறை
படிப்பதால் உணர்ந்துகொள்ளத் தக்கவை அல்ல அவருடைய சிறுகதைகள். கதைக் கருத்துகளும்
வேறுபட்ட போக்கில் அமைந்தவை. தேநீர்க் கடையில் கேட்கும் ஒலிபெருக்கியின்
குரலானாலும், ஒரு பெண்ணை இளைஞன் பார்க்கும் பார்வையாக இருந்தாலும், பங்களாவில்
குரைக்கும் நாயின் குரலானாலும், குதிகால் உயர்ந்த செருப்பு அணிந்து நடக்கும்
பெண்ணின் நடையாக இருந்தாலும் அவர் வருணிக்கும் முறையே தனித்தன்மை உடையதாக
இருக்கும். அழியாச்சுடர், மனக்கோலம், சாவில் பிறந்த சிருஷ்டி, பிரபஞ்ச கானம்
முதலிய பல கதைகளை அவர் ஆழ்ந்த உணர்வோடு எழுதியுள்ளார்.
|