ந. பிச்சமூர்த்தியின் முள்ளும் ரோஜாவும் ஒரு நல்ல சிறுகதை. அவருடைய நீதிமன்ற அனுபவமும்
சட்ட அறிவும் கதைகளுக்கு நன்றாகப் பயன்பட்டிருக்கின்றன. காதல் உள்ளம் கொண்ட பாத்திரத்தைப்
படைக்கும்போதும், ஒரு பெண்ணின் முந்தாணி வீச்சு, கோணல் சிரிப்பு, நடையின் அழுத்தம்
முதலியவற்றை எல்லாம் காரணங்களாகக் கொண்டு கணக்கிடுவதையும் முடிவு செய்வதையும் காண்கிறோம்.
கொலுபொம்மை என்ற சிறுகதையில் ஓர் ஏழைப்பெண்ணின் பிஞ்சு மனம் படும்பாட்டைப்
படம் பிடித்துக் காட்டுகிறார். நகையைத் திருடிவிட்டாள் என்று பழி சுமத்தி அந்த மனத்தை
வாட்டுகிறார்கள். நகை கிடைத்து விடுகிறது. இரக்கம் பிறக்கிறது.
‘அவலும் உமியும்’ என்பது தி. ஜானகிராமனின் நீண்ட கதைகளில் ஒன்று. அறிவு நிலைக்கும்
உணர்ச்சிநிலைக்கும் உள்ள மாறுபாட்டைத் தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் கதை செல்கிறது.
அவருடைய மாவட்டமாகிய தஞ்சாவூர்ப் பகுதியின் பேச்சுமொழி கதையில் மிகுந்து நிற்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்துக் கிராம வாழ்க்கைபற்றிய அவருடைய நல்ல அனுபவம் தக்க வகையில்
அவருக்குப் பயன்படுவதை காண்கிறோம். கிராமமும் நகரமும் மாறுபடுவதும் இணைவதும் ஆகிய
இரு பாங்கையும் காண்கிறோம். கிண்டலையும் வெறுப்புணர்ச்சியையும் நயமாகக் கையாளும்
ஆசிரியர் அவர்.
இளைஞர்களின்
காமப் பேச்சைக் கேட்டு மனம் குமுறும் ஒரு பெண்ணின் பண்பைச் ‘சிவப்பு ரிக்ஷா’
என்னும் கதையில் விளக்குகிறார். கிராமத்தில் செல்வாக்குப் பெற்ற பெரிய வீட்டுக்காரரின்
செருக்கான செயல்களைத் ‘தேவர் குதிரை’ என்னும் கதையில் காண்கிறோம்.
‘கோபுர விளக்கு’ ஒரு புரட்சியான கருத்துக் கொண்டது. குடும்பத்தைக் காப்பதற்காக
உடம்பை விற்கிறார் ஒருவர்; அவர் மாண்டு மறைந்தபிறகும் அவரைப் பழிக்கிறது ஊர்.
அத்தகைய இருட்டுக் கொள்கையில் வாழ்வோருக்கு விளக்கு தேவை இல்லை என்று கோயில்
கோபுரத்து விளக்கை அணைத்துவிடுகிறார் பெரியவர் ஒருவர். ‘அம்மா வந்தாள்’
என்னும் அவருடைய நாவலிலும் கண்மூடி நம்பிக்கையின் அடிப்படையில் வளர்ந்த சில கொள்கைகள்
தகர்க்கப்படுகின்றன.
அவருடைய
பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு ‘அக்பர் சாஸ்திரி. பெயரிலேயே புலனாகும்
வக்கிரமும் கிண்டலும் நகைச்சுவையும் கதைகள் பலவற்றிலும் உள்ளன. கதைகள் யாவும் திட்பமான
கலைவடிவில் அமைந்துள்ளன. அவற்றில் பெரிய நிகழ்ச்சிகள் இல்லை; மனநிலை ஆராய்ச்சிகள்
இல்லை. ஆனால் படைக்கப்பட்ட பாத்திரங்கள் எல்லாரும் முழுமை பெற்றுக் காணப்படுகிறார்கள்.
|