பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 303 -

அவருடைய நாவல்களில் ‘மோக முள்’ குறிப்பிடத் தக்கது. இதில் நாகரிக வரம்பு மீறாமல் பாலுணர்ச்சிகளை விளக்குகிறார். ‘உயிர்த் தேன்’ என்னும் நாவலில், அமைதிக்காகக் கிராமத்தை நாடிச் சென்ற இளைஞன் அங்குள்ள பிரச்சினைகளில் சிக்குண்டு போராடுவதைச் சித்தரித்துள்ளார்.

சிதம்பர சுப்பிரமணியத்தின் ‘சக்ரவாகம்’ முதலிய கதைகள் ஆழம் உடையவை; சிறுகதை வடிவம் தெளிவாக அமைந்தவை.

லா. ச. ராமாமிருதம் தமக்கென்று தனிச் சிந்தனைப் போக்கும் தனிநடையும் உடையவர். வாழ்க்கையைபற்றி அவர் கொண்டிருக்கும் தத்துவப் பார்வை அவருடைய கதைகளில் பல இடங்களிலும் வெளிப்படுகிறது. காதல், கோபம், போராட்டம் எதுவாயினும் சாவின் நிழல் கலந்து நிற்பதை அவருடைய பல கதைகளிலும் காணலாம். மனம் எண்ணும் எண்ணங்களின் போக்கை எடுத்துக்காட்டும் திறன் அவர் கதைகளில் அமைந்துள்ளது. அவருடைய நடையில் வேகத்தையும் காணலாம்; மென்மையையும் காணலாம். ஆனால் அவருடைய தத்துவம் பலர்க்குப் புரியாததாக உள்ளது. அவர் கூறும் முறையில் சிக்கல் எளிதில் விடுபடவில்லை.

ஜனனி என்னும் கதையில் சக்தியே மண்ணுலகத்தில் பிறந்து வாழ்க்கையை ஆராய்வதைக் காண்கிறோம். உலகத்தை நன்றாக அறிவதற்காக ஒழுக்கம் கெட்ட ஒருத்தியின் வயிற்றில் சக்தி பிறப்பதாகக் கற்பனை செய்து, உலக மாதாவாக உயர்ந்து ஒளிர்வதைக் காட்டுகிறார். அதன் முன்னுரைமுதல் முடிவுரை வரையில் ஆசிரியரின் புதியநோக்குப் புலப்படுகிறது.

‘இதழ்கள்’ என்ற பெயரால் உள்ள தொகுப்பின் சிறுகதைகளும் குறிப்பிடத் தக்கவை. சிறுகதைத் தொகுப்புகள் ஐந்து அவர் அளித்தவை.

சி. சு. செல்லப்பா படைத்துள்ள சிறுகதைகள் சிலவே என்றாலும், அவற்றில் தம் தனித் தன்மைகளைப் புலப்படுத்தியுள்ளார். வாழ்க்கையை ஒட்டிய நடப்பியலில் அவருக்கு உள்ள ஆர்வத்தையும் அவற்றில் காணலாம். ‘ஸரஸாவின் பொம்மை’ ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பு. அதில் உள்ள ஸரஸாவின் பொம்மை என்ற கதை தனிச் சிறப்பு உடையது. ஸரஸாவின் பொம்மையாகக் கருதிப் பழகி வந்தவன் கடைசியில் ஸரஸாவின் பொம்மையாகவே ஆகிவிடுகிறான். பெரிய நிகழ்ச்சிகள் இல்லாமல் எண்ண அலைகளையே பெருக்கி ஒரு சிறுகதையைப் புனைய முடியும் என்பதற்கு அது ஒரு நல்ல எடுத்துக்காட்டு (புதுமை இலக்கியத்தில் ஆர்வம் நிரம்பிய செல்லப்பா, பழைய செய்யுளிலக்கணம் இல்லாமல் புதிய கவிதை