பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 304 -

வடிவங்களில் ஆசைகொண்டு சில கவிதைகளையும் படைத்துள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது)

1950-க்குப் பிறகு சிறுகதை இலக்கியம் படைத்து அளித்தவர்களுள் சுந்தர ராமசாமி குறிப்பிடத் தகுந்தவர். இலேசான நையாண்டி அவருடைய கதைகளில் காணலாம். வலுவான கொள்கைகள் அந்தக் கதைகளில் உணர்த்தப்படும். அவருடைய கதைத் தொகுப்புகளுள் இரண்டாவதாகிய பிரசாதம் என்பது பதினெட்டுச் சிறந்த சிறுகதைகள் கொண்டது. முதல் தொகுப்பில் காணப்பட்ட பொருளாதார சமுதாயப் புரட்சி வேகம் இந்தக் கதைகளில் இல்லை.

கதைகளுக்கு முழுமையான வடிவம் தருவதில் வல்லவர் அவர். உலகத்தில் எங்கெங்கோ காணும் மாந்தர்களை - போலீஸ்காரன், நோயாளி, அர்ச்சகர் முதலானவர்களை - தேடிப் பிடித்துக் கதைகளில் வாழச் செய்கிறார். அவர்களால் இன்ன உண்மை விளங்குகிறது என்று அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும், வாழ்க்கையின் பல்வேறு கோணங்கள் விளங்குகின்றன என்பது மட்டும் உண்மை. குமரி மாவட்டத்துக் கொச்சை மொழிகளை மாந்தர்களின் உரையாடலில் அளவறிந்து கையாளும் எழுத்தாளர் அவர். அவருடைய ‘ஒரு புளிய மரத்தின் கதை’ என்ற நாவல் புதிய உத்தியால் அமைந்தது. புளிய மரமே கதைத் தலைவன். ஓர் ஊரில் காடு குளம் எல்லாம் அழிக்கப்பட்டு அந்த மரம்மட்டும் சாலையில் நிற்கிறது. கடைசியில் அதுவும் வெட்டப்படுகிறது. அதற்கு இடையில் ஊரார் பலர் பலவகையாகப் பேசும் பேச்சுகளும், நகரசபைத் தலைவரும் கிளர்க்கும் பேசும் பேச்சுகளும், மரத்தின் அடியே சிறு கடை வைத்துப் பெரிய வியாபாரியாகி அழியும் ஒருவனுடைய வாழ்க்கை நிலைகளும் சுவையாக அமைந்துள்ளன. ‘அக்கரைச் சீமையில்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு பல நல்ல படைப்புகளைக் கொண்டது. தெருப் பொறுக்கிகளான போக்கிரிகளும் திக்கற்றவர்களும் ஒன்று திரண்டு போர்க்கோலம் கொண்டு முதலாளியின் மகளை எதிர்ப்பதாக வரும் ஒரு காட்சி புதுமையாகப் படைக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சியான நடையில் சிறுகதைகள் எழுதியவர் கு. அழகிரிசாமி. அவருடைய ‘தவப்பயன்’ என்னும் தொகுதியில், ஆண்மகன் என்ற சிறுகதையில் ஒரு சமையல்காரன் வருகிறான். பெண்கள் அவனை ஓர் ஆண்மகனாக மதிக்காமல், அவன் இருப்பதைப் பொருட்படுத்தாமல் குதிப்பதும் கும்மாளமிடுவதும் அவனால் பொறுக்க முடியவில்லை. தன்னை ஆண்மையுடையவனாகக் கணக்கில் சேர்த்துக்கொள்ளாதவர்களின் நடுவே வேலை செய்ய மனம் இல்லாதவனாய், அவன் சமையல் வேலையை உதறிவிட்டுச் செல்கிறான். கிராமத்தில் சின்ன கடை வைத்துச் சிறு லாபம் பெற்று அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்த ஒரு செட்டியாரைப்பற்றிக்