கூறுவது ‘புது
உலகம்’ என்னும் சிறுகதை. அவர் நகரத்துக்கு வந்து கடை வைக்கிறார்; கடையில்
வியாபாரம் வளர்கிறது; பணம் பெருகுகிறது; கடை பெரியதாகிறது. ஆனால் அவருடைய அமைதி
போய்விட்டது; ஓய்வு இல்லாமல் உழைத்து உழைத்துக் குமுறுகிறார். ‘வரப்பிரசாதம்’
என்ற தொகுப்பும் பல சிறந்த படைப்புகளைக் கொண்டது.
அவருடைய
கதைகள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்து வடபகுதிக் கிராமங்களை பின்னணியாகக்
கொண்டவை. அப்பக்கத்துப் பழக்கவழக்கங்களை அவருடைய கதையில் காணலாம்.
நாட்டில்
1955 - 59-இல் ஏற்பட்ட பஞ்சத்தைச் சொல்லோவியமாக்கிக் காட்டுவது அவருடைய ‘திரிபுரம்’
என்ற கதை. புது உலகத்தில் நம்பிக்கை கொண்டு புதுமை பலவற்றை வாழ்வில் வரவேற்கும்
அவர், புதிய உத்திகளைக் கையாளாமல் ஆற்றொழுக்காகக் கதைகள் சொல்லிப் பல உயர்ந்த
நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் விளக்கம் தந்துள்ளார்.
டாக்டர்
அனுராதா என்பது அவர் எழுதிய சுவையான நாவல். இலக்கியக் கட்டுரைகள் பல எழுதி நல்ல
திறனாய்வுக் கருத்துகளையும் தந்துள்ளார்.
விந்தன்
எழுதிய கதைகள் சமுதாயத்தின் ஊழல்களைக் கடுமையாகத் தாக்குபவை; விறுவிறுப்பு உள்ளவை.
‘பாலும் பாவையும்’ என்னும் நாவல் போலவே, அவருடைய சிறுகதைகள் பல,
ஊமைகளான ஏழை மக்களின் உள்ளக் குமுறலுக்குக் குரல் அளிப்பவை. ‘ஒரே உரிமை’
என்னும் தொகுப்பில் வடிவச் செம்மை உடைய சிறுகதைகள் பல உள்ளன. அவர் படைக்கும்
பாத்திரங்கள் பெரும்பாலும் அப்பாவிகளாக உள்ளன. அவர்களுக்குச் சமுதாயத்தின்
வயிற்றெரிச்சல் தோன்றுவதில்லை. ஆனால் படிக்கும் நமக்குமட்டும் சமுதாயத்தின் நிலையில்
உள்ளவர்களின் வெறுப்பும் வயிற்றெரிச்சலும் தோன்றுகின்றன; ஆத்திரமும் பொங்குகிறது.
அவர் கையாளும் உவமைகளும் சமுதாயக்கேட்டுக்குக் காரணமானவர்களை வம்புக்கு இழுப்பனவாக
உள்ளன. “தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்துவிட்டவர்களைப்போல்,
போடா போ என்று எரிச்சலுடன் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் சங்கர்.”
“அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது - சூரியனைக் கண்ட தாமரையைப் போல்
அல்ல; சோற்றைக் கண்ட ஏழையைப் போல.” இவை அவருடைய சொல்லம்புகளான உவமைகளுக்கு
இரண்டு எடுத்துக் காட்டுகள். அவருடைய கதைகளில் கறவை மாடு குடும்பத்துக்குக் ‘கார்டியன்’
ஆகிறது. கிளி ‘கைது’ செய்யப்படுகிறது! குப்பைத் தொட்டிக்கும் வேலைக்காரியின்
வயிற்றுக்கும் உள்ள வேற்றுமை மறைந்துபோகிறது. பேச்சுவழக்கில் உள்ள சில எளிய
|