பக்கம் எண் :

69

Tamil Virtual University

  பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்

ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே ! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !

வட்டார வழக்கு : கன்னாரே, பின்னாரே-பொருள் விளங்கா மொழி-(ஆங்கிலம்).

இவ்வாறு தாயின் உறவினர்கள் சிறப்புச் செய்யாவிட்டால் மாமியார் முகம் கோணலாகிவிடும்.

எனவே உறவினர் பரிசுகளைத் தாலாட்டு விடாமல் சொல்லி வரும். வங்காளத்தில் “பாரோ மாசி” என்ற நாடோடிப் பாடல் வகை உள்ளது. அதில் பன்னிரெண்டு மாதங்களிலும் நிகழும், கால மாறுபாடுகளையும் உழவு வேலைகளையும் ஒரு கதையோடு தொடர்புபடுத்திப் பாடுவார்கள். இவற்றுள் எல்லா வகைகளைப் பற்றியும் “தூசன்ஸ்பக்விட்டல்” என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர் ஒரு கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். அவற்றுள் ஒருவகையில் ஒவ்வொரு மாதத்திலும் நாம் செய்யவேண்டிய காரியங்கள் வரிசையாகக் கூறப்படுகின்றன. உதாரணமாக எந்த மாதத்தில் ஆடு வாங்க வேண்டும், எந்த மாதத்தில் ஊர்த் தேவதைக்குத் திருவிழாக் கொண்டாட வேண்டும் என்பனவெல்லாம் வரிசைக்கிரமமாகக் கூறப்படும். பொதுவாக இவை உழவு வேலையைப் பற்றியதாக இருக்கும். உழவர் ‘பாரோ மாசி’ தான் இவ்வகைப் பாடல்களிலேயே புராதனமானது. அவற்றிலிருந்து கதைப் பாடல்களும், பக்திப் பாடல்களும் தோன்றியிருக்கின்றன. வங்காளத்துப் ‘பாரோ மாசி’யைப் போல, தாலாட்டிலும் வருங்காலத்தில் தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய கடமைகளைத் தாய் அறிவுறுத்துவாள். இவ்வறிவுரை மகளைப் பார்த்துக் கூறுவதாகவும் இருக்கலாம்.