பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 10 -

வேறு

21. துதிகள் செய்துபின் றூய்மணி நன்னிலத்
  ததிகொள் சிந்தையி னம்பிறப் பணிந்துடன்
  நெதியி ரண்டென நீடிய தோளினான்
  யதிகொள் பண்ணவர் பாவலன் புக்கதே.

செல்வம்போல் நீண்ட இரண்டு தோளினையுடைய சிரேணிக மகாராசன் இவ்வாறாக சிரீவர்த்தமானரைத் துதித்துப் போற்றினான்.  பின் தூய்மையான அழகிய நல்ல நிலத்தில் விழுந்து நிலைத்த சிந்தையனாய்ப் பணிந்தான்.  பின் உடனே எழுந்து, முனிவர் எல்லாரும் உளங்கொண்டு போற்றி வணங்கும் தேவர் பாவலனை அடுத்தான். (21)

22. சிறந்து கோட்டத்துச் செல்வக கணதரர்
  இறைவ னன்மொழி யிப்பொரு ளுட்கொண்டு
  அறைய மர்ந்துயிர்க் கறமழை யைப்பெயுந்
  துறவ னற்சரண் டூய்தி னிறைஞ்சினான்.

சிறப்புடைய கோயிலிலே அறிவுச் செல்வமுடைய கணதரர் அருளிய இறைவனுடைய நல்ல மொழியின் பொருளை மனத்துட் கொண்டான்.  மலையின் மேல் அமர்ந்து உயிர்களுக்கெல்லாம் தரும மழையைப் பொழியும் துறவனாம் வர்த்தமானரின் திருவடிகளைத் தூய்மையனாய் வணங்கினான். (22)

தவராசராம் கௌதமர் பாதம் பணிந்து தருமம் கேட்டல்

23. மற்றம் மாமுனி யேர்மல ராம்பதம்
  உற்று டன்பணிந் தோங்கிய மன்னவன்
  நற்ற வர்க்கிறை யானநற் கௌதமர்
  வெற்றி நற்சரண் வேந்த னிறைஞ்சினான்.

பின் பெருமை படைத்த அம் முனிவரின் பாதங்களைச் சேர்ந்து பணிந்து உயர்வு பெற்ற அரசன், நல்ல தவசியர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கிய கௌதமரின் வெற்றிதரும் நல்ல பாதங்களை வணங்கினான். (23)

24. இருக ரத்தி னிறைஞ்சிய மன்னனும்
  பொருக யற்கணிப் பூங்குழை மாதரும்
  தரும தத்துவஞ் சனமுனி வர்க்குரை
  இருவ ருமியைந் தின்புறக் கேட்டபின்.