பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 9 -
முனிவுமுத லில்லாத முனைவ னீயே
  முக்குடையின் கீழமர்ந்த முதல்வ னீயே
  செனித்திறக்கு மூப்பி றப்புந் தீர்த்தாய் நீயே
  சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே.

முனிவர்க்கெல்லாம் முதல்வனாய் விளங்குபவன் நீ.என்றும் மூப்பில்லாது ஒருதன்மைத்தாய் விளங்கும் தலைவன் எனப் படும் முத்திக்குரியவன் நீயே.மகிழ்வூட்டும் ஆனந்த சுகத்தில் அழுந்தியிருப்பவன் நீயே.உலகியலுக்கான ஆறு பொருள்களைச் சொன்ன ஈசன் நீ.கோபம் முதலியன இல்லாத முன்னோன் நீதான்.முக்குடையின்கீழ் அமர்ந்து விளங்கும் தலைவனும் நீதான்.பிறந்து இறக்கும்படி நேர்விக்கும் மூப்பையும் இறப்பையும் இல்லா தொழிந்தவன் நீயே.சிரீவர்த்தமானன் என்னும் பெயர் பெற்ற புனிதன் நீயே.         (19)

20. நவபதநன் னயமாறு நவின்றாய் நீயே
  நன்முனிவர் மனத்திசைந்த னாத னீயே
  உவமையிலா வைம்பதமு முரைத்தாய் நீயே
  உத்தமர்த மிருதயத்து ளுகந்தாய் நீயே
  பவமயமா மிருவினையைப் பகர்ந்தாய் நீயே
  பரம நிலையமர்ந்த பரமன் நீயே
  சிவமயமாய் நின்றதிகழ் தேச னீயே
  சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே.

ஒன்பது பதங்களையும் ஆறு நயங்களையும் சொன்னவன் நீ.நல்ல முனிவர்களின் மனத்தில் பொருந்தியுறையும் தலைவனும் நீதான்.ஒப்புமை சொல்ல இயலாத ஐந்து பதவிகளையும் சொன்னவன் நீதான்.உத்தமராம் தூயோரின் இதய கமலத்துள் அமர்ந்து மகிழ்விக்கின்றவன் நீயே.பிறப்பு  மயமாக ஆக்கும் நல்வினை தீவினை என்னும் இருவினை நிலையையும் விளக்கிச் சொன்னவனும் நீதான்.மேலான நிலையில் அமர்ந்துள்ள இறைவனும் நீதான்.மங்கலமாம் சிவமயமாய் நின்ற ஒளிதிகழ் தேசத்து இருப்பவனும் நீயே.சிரீவர்த்தமானன் என்னும் புனிதன் நீதான்.                         (20)