பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 8 -

மேலான முத்தி நிலையைச் சேர் எனக் கட்டளையிட்டவன் நீதான்.உறங்காது யோகம் செய்து வாழும் நல்ல துறவியருலகம் தொழும் தூயோன் நீதான்.பண்டைய வினைகள் எல்லாம் சேராமல் பொசுக்கிய துறவோன் நீதான்.செஞ்சொற்பாவையாகிய கலைமகளை நாவில் கொண்டவன் நீதான்.சிரீவர்த்தமானன் என்னும் பெயருடைய தூயோன் நீதான்.            (17)

18. அறவனீ யமலனீ யாதி நீயே
  ஆரியனீ சீரீயனீ யனந்த னீயே
  திரிலோக லோகமொடு தேய னீயே
  தேவாதி தேவனெனுந் தீர்த்த னீயே
  எரிமணிநற் பிறப்புடைய யீச னீயே
  இருநான்கு குணமுடைய யிறைவ னீயே
  திரிபுவனந் தொழுதிறைஞ்சுஞ் செல்வ னீயே
  சிரீவர்த்த மானமெனுந் தீர்த்த னீயே.

தரும உருவினன் நீ.குற்றமற்றவன் நீ.மூல முதற்பொருள் நீ.எல்லாவற்றிற்கும் மேலானவன் நீ.செல்வத்துக் கிருப்பிடமானவன் நீ.அனந்தனாக-எல்லாமாக இருப்பவனும் நீ.மூன்று உலகங்களையும் பிற உலகங்களையும் நாடாக உடையவன் நீதான்.தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்கும் புனிதன் நீ.ஒளி வீசும் மணியின் நல்ல பிறப்புக்கிடமானவன் நீ.எட்டுக் குணமுடைய இறைவன் நீயே.மூன்றுலகத்தாரும் வந்து வணங்கும்படியான முத்திச் செல்வமுடையவன் நீ.சிரீவர்த்தமானன் என்னும் பெயருடைய தேவனும் நீயே.   (18)

19. முனிவர்தமக் கிறையான மூர்த்தி நீயே
  மூவா முதல்வனெனு முத்த னீயே
  இனிமையா னந்தசுகத் திருந்தாய் நீயே
  இயலாறு பொருளுரைத்த வீச னீயே