பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 12 -

வாசவன் காட்டிய படத்துரு மாதரைச் சயந்தரன்
யார் என வினாவுதல்

28. மற்றுந் தேவியர் மன்னுமெண் ணாயிரர்
  வெற்றி வேந்தன் விழைந்துறு கின்றநாள
  பற்ற வாணிகன் பல்பொருள் பொற்கலத்
  துற்ற மாதர் படத்துருக் காட்டினான்.

விசாலநேத்திரையோடு மன்னனுக்கு மற்றும் எண்ணாயிரம் தேவியர் உரிமையாயிருந்தனர்.  வெற்றி பல கொண்ட இவ்வரசன் சயந்தரன் தம் தேவியருடன் இன்புற்று வாழ்கின்ற நாள்களுள் ஒருநாள் அம்மன்னன் அரண்மனைக்கு வணிகன் வாசவன் என்பான் வந்தனன்.  அவன் பல அரிய பொருள்களோடு மரக்கலத்தில் வந்த ஒரு பெண்ணின் உருவப் படத்தையும் காட்டினான்.        (28)

29. மன்ன னோக்கி மயங்கி மகிழ்ந்தபின்
  கின்னரி யோகி ளர்கார் மாதரோ
  இன்ன ரூபமிக் காரிது வென்றலும்
  மன்னும் வாசவன் வாக்குரை செய்கின்றான்.

மன்னன் சயந்தரன் படத்தில் கண்ட மாதர் உருவு கண்டு மோகத்தால் மயங்கி மகிழ்வுற்றான்.  பின், ‘இவ்வளவு அழகு படைத்த இவள் கின்னரர் குலப் பென்ணோ? எழுச்சிமிக்க மேகத்தினின்று பிறந்த பெண்ணோ?‘ என்று வினவினான்.  கேட்ட வணிகன் வாசவன் மறுமொழி பகரலானான்.  (29)

வாசவன் மறுமொழி

30. சொல்ல ரியசு ராட்டிர தேசத்துப்
  பல்ச னநிறை பரங்கிரி யாநகர்
  செல்வன் சிரீவர்மன் றேவியுஞ் சிரீமதி
  நல்சு தையவள் நாமம் பிரிதிதேவி.

புகழ்வதற்கரிய சுராட்டிர தேசத்திலே பல்வகை மாந்தரும் நிறைந்து வாழும் பரங்கிரியா நகரில் உள்ளான் செல்வன் சிரீவர்மன்.  அவனுடைய மனைவி பெயர் சிரீமதி.  இவர்களுடைய மகளின் பெயர் பிரிதிதேவிஎன்பதாம்.     (30)