பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 13 -

சயந்தரன் பிரிதிதேவியை மணந்து பட்டத்தரசியாக்குதல்

31. அவ்வ ணிகன வளுடை ரூபத்தைச்
  செவ்விதிற் செப்பச் சீருடை மன்னனும்
  மௌவ லங்குழன் மாதரைத் தானழைத்துத்
  தெய்வ வேள்வியிற் சேர்ந்து புணர்ந்தனன்.

    அந்த வணிகன் அவளுடைய அழகினைப் பாங்குற அழகாகச் சொல்ல, சிறப்புப் பொருந்திய அரசனும் முல்லை மலர் சூடிய கூந்தலை யுடைய அந்தப் பிரிதிதேவியை அழைப்பித்து, தெய்வத் தன்மை பொருந்திய திருமண வேள்விச் சடங்குகள் ஆற்றி, அவளை அடைந்து சேர்ந்திருந்தான். (31)

32. மன்ன னின்புற்று மாதேவி யாகவே
  நன்மைப் பட்ட நயந்து கொடுத்தபின்
  மன்னு மாதர்கள் வந்து பணிந்திட
  இன்ன வாற்றி னியைந்துடன் செல்லுநாள்

மன்னன் சயந்தரன் பிரிதிதேவியுடன் கூடி இன்பம் நுகர்ந்து வாழ்ந்து, அவளுக்குப் பெருந்தேவிப் பட்டம் தந்து சிறப்பித்தான்.  பிற மாதர்களும் வந்து பணிந்து ஏவல் செய்யுமாறு பெருமையுடன் அவள் வாழ்ந்து வந்தாள்.  இவ்வாறு வாழ்ந்துவரும் நாளில்--     (32)

பிரிதிதேவி-விசாலநேத்திரை சந்திப்பு

33. வயந்த மாடவே மன்னனு மாதரும்
  நயந்து போந்தனர் நன்மலர்க் காவினுட்
  பெயர்ந்து பல்லக்கி னேறிப் பிரிதிதேவி
  கயந்த னீரணி காண்டற்குச் சென்றநாள்.

வசந்த காலத்து விளையாட்டின்பொருட்டு அரசனும் தேவி மாரும் விருப்போடு நல்ல மலர் நிறைந்த பூங்காவினை அடைந்தனர்.  பிரிதிதேவி பல்லக்கில் ஏறி, பூங்காவிலுள்ள குளத்தில் நீர் விளையாட்டுக் காண்டற்காகச் சென்றாள்.  அந் நாளில் --         (33)

34. வார ணத்தின்முன் மார்க்கத்து நின்றவள்
  வாரணி கொங்கை யாரவ ளென்றலும்
  ஏர ணிம்முடி வேந்தன்மா தேவியென்று
  தார ணிகுழற் றாதி யுரைத்தனள்.

வழியில் தனக்கு முன்பாக யானையின் மீது அமர்ந்து செல்லுகின்ற கச்சணிந்த முலையுடையாளாகிய மங்கை யார் என்று பிரிதிதேவி வினவினாள். ‘அழகிய திருமுடியணிந்த அரசனின் மாதேவியே அவள்'' என்று மலர் மாலை சூடிய கூந்தலுடையாளாகிய தோழி உரைத்தாள்.  (34)