பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 15 -

தன்னை வணங்கிய பிரிதிதேவியை மேலான அம் முனிவன் நல்லுரைகளால் வாழ்த்தினான்.  முனிவனை நோக்கி அவள், ‘அழகுபெற நல்ல தவம் எனக்குக் கைகூடுமோ?‘ என்று வினவினாள்.  ‘அளவிட முடியாத நற்குணமுடைய புதல்வனைப் புகழுடன் நீ பெறுவாய்‘ என்று இவ்வாறு மணி விளக்குப் போன்று ஒளிவீசும் மாதவனும் சொன்னான்.     (37)

38. நின்றசனந் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப்
  பின்றை யறவுரைகள் பெருமிதமாய்க் கேட்டுவிதி
  வென்ற பரமனடி விமலமாய்த் தான்பணிந்து
  அன்றுதான் புத்திரனை யவதரித்தாற் போன்மகிழ்ந்தாள்.

நீண்ட நெடுங்காலம் தவம் புரிந்து, பின்பு அறவுரைகள் மிகுதியாய்க் கேட்டு, விதிவென்ற பரமனாகிய முனிவனின் திருவடிகளைப் பிரிதிதேவி தன்னுடன் நிற்கும் தோழியருடன் குற்றம் அறப் பணிந்து, அன்றுதானே புத்திரனைப் பெற்றாற்போலப் பெருமகிழ்வு கொண்டாள்.   (38)

தோழியருடன் பிரிதிதேவி அரண்மனை புகுதல்

வேறு

39. நற்றவ னுரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டு
  பற்றுட னுணர்ந்து நல்ல பாசிழைப் பரவை யல்குல்
  உற்றதன் குழலி னாரோ டுறுதவன் பாதந் தன்னில்
  வெற்றியி னிறைஞ்சி வந்து வியன்மனை புகுந்தி ருந்தாள்

நல்ல தவமுடைய முனிவனின் சொற்களை மணமலர் மாலை யணிந்த கூந்தலையுடைய பிரிதிதேவி கேட்டுப் பற்றுதலுடனே நினைந்து, நல்ல பசுமையான ஆபரணம் அணிந்த பரந்த அல்குலை யுடைய தனக்குற்ற தோழிமாரோடு மிக்க தவமுடைய முனிவனின் பாதத்தில் வீழ்ந்து வெற்றியோடு வணங்கி, மீண்டுவந்து, தன்னுடைய அகலமான பெரிய அரண்மனையிலே புகுந்து அமர்ந்திருந்தாள்.     (39)

  (முதல் சருக்கம் முற்றும்)