சயந்தரன்-பிரிதிதேவி
உரையாடல்
40. |
வனவிளை யாட லாடி மன்னன் றன்மனை புகுந்து |
|
மனமகிழ் கோதை தன்னை மருவிய காத லாலே |
|
புனலினீ யாட லின்றிப் போம்பொருட் புகல்க வென்ன |
|
கனவரை மார்பன் கேட்பக் காரிகை யுரைக்கு மன்றே. |
பிரிதிதேவி தன்னுடன் வன விளையாட்டிற்கு வரவில்லையே என்னும் கவலையால் சயந்தர மன்னன்
வன விளையாடலை இனிதின் ஆடி முடித்துத் தன் அரண்மனைக்குச் சென்று மனத்துக்கிசைந்த
பிரிதி தேவியின்மேல் தனக்குள்ள அன்பின் மிகுதியால், அவளை நோக்கி, ‘நங்கையே!
நீ இனிய புனலாட்டமாடலின்றித் தனியே வீட்டிற்கு வரக் காரணம் யாது?‘ என, அதற்கு
அவள் தான் விசால நேத்திரையை வணங்கலாகாது எனும் காரணத்தைக் கூறாமல் வேறு வகையில்
கூறினாள்.
பிரிதிதேவி-பிரத்துவீதேவி. கனவரை-பொன்மலை, மேருமலை.
(1)
41. |
இறைவனா லயத்துட் சென்று விறைவனை வணங்கித் தீய |
|
கறையிலா முனிவன் பாதங் கண்டடி பணிந்து தூய |
|
அறவுரை கேட்டே னென்ன வரசன்கேட் டுளம கிழ்ந்து |
|
பிறைநுதற் பேதை தன்னாற் பெறுசுவைக் கடலு ளாழ்ந்தார். |
நான் இறைவன் ஆலயத்திற் சென்று இறைவனை வணங்கித் துதித்து மனத்திலே தீய களங்கஞ்
சிறிதுமில்லாத பிரஹிதாஸ்வரர் எனும் ஓர் முனிவரைக் கண்டு அவர் பாதங்களை வணங்கிப்
புனித மான திருவறங் கேட்டேன். அவர் உனக்கு இனி ஓர் சிறந்த புத்திரப்பேறு உண்டாகும்
என்று அருளினார் என்றாள். அதைக் கேட்ட மன்னன் அகத்திலே அளவிலா மகிழ்ச்சியடைந்து
அவளோடு இனிது இன்பசுகந் துய்த்து வரலாயினான். (2)
|