பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 17 -

பிரிதிதேவி கண்ட கனவு

42. இருவரும் பிரித லின்றி யின்புறு போகந் துய்த்து
  மருவிய துயில்கொள் கின்றார் மனோகர மென்னும் யாமம்
  இருண்மனை இமிலே றொன்று மிளங்கதிர் கனவிற் றோன்றப்
  பொருவிலாட் கண்டெ ழுந்து புரவலர்க் குணர்த்தி னாளே.

இங்ஙனம் இருவரும் இணைபிரியாராய் இன்பமயமான போகந் துய்த்துவருங் காலத்திலே ஒருநாள் இரவு, நித்திரைசெய்யும் போது, மனோகரம் என்னும் நான்காம் யாமத்திலே ஓர் இமில் ஏறும் இளங்கதிர்ச் செல்வனும் இருளில் தன் மனை புகுந்ததாகப் பிரிதிதேவி கனவு கண்டு, உடனே விழித்தெழுந்து அரசனுக்கு அறிவித்தாள்.    (3)

சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும் கனாப்பயன் கேட்டல்

43. வேந்தன்கேட் டினிய னாகி விமலனா லயத்துட் சென்று
  சேந்தளிர்ப் பிண்டி யின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
  காந்திய முனிக்கி றைஞ்சிக் கனாப்பய னுவல வென்றான்
  ஏந்திள முலையி னாளு மிறைவனு மிகுந்து கேட்டார்.

அரசனும் கேட்டு அகமகிழ்ந்து அறிவன் ஆலயம் போந்து, செந்தளிர்ப்பிண்டியின்கீழ் வீற்றிருக்கும் அருகபரமனை வணங்கித் துதித்து, ஆங்கு உறைந்த ஓர் அறிவொளிகாலும் முனிவரனைப் பணிந்திறைஞ்சித் தாம் கண்ட கனாப்பயன் யாதெனக் கண்டருளுமாறு கேட்டார்கள்.  அவரும் கூற இருவரும் இனிது ஒன்றியிருந்து கவனித்துக் கேட்கலானார்கள்.

முனைவனை இறைஞ்ச, அதாவது வணங்கிக் கண்ட கனாவினை உரைக்க, வென்றான் அக் கனாப்பயன் நுவல, இருவரும் இருந்து கேட்டார் என்று முடிவு கொள்ளுதல் பொருத்தமாம்.     வென்றான்-ஐம்புலனையும் அடக்கி வெற்றிகொண்ட சினாலய முனிவர்.       (4)

புத்திரன் பிறப்பான் என்றார் முனிவர்

44. அம்முனி யவரை நோக்கி யருந்துநற் கனவு தன்னைச்
  செம்மையி னிருவர் கட்குஞ் சிறுவன்வந் துதிக்கு மென்றுங்
  கம்பமின் னிலங்க ளெல்லாங் காத்துநற் றவமுந் தாங்கி
  வெம்பிய வினைய றுத்து வீடுநன் கடையு மென்றார்.

அம் முனிவரர் அவர்களை நோக்கி, ‘நீவிர் கண்ட கனாவின் பயனைக் கூறுகிறேன். கேட்பீராக‘ எனத் தன் அவதிஞானத்தாலறிந்து,