பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 20 -

ஒன்பது மாதமும் நிறைந்து ஓர் நன்னாளில் திருக்குமரன் அவதரித்தான்.  சந்திரனைக் கண்ட கடல்போல மன்னன் உளம் பூரித்து, உவகையடைந்து, தன் பொன் அறை திறந்து, தரணியிலுள்ள பலருக்கும் தானம் செய்து புத்திர உற்சவம் கொண்டாடினான்.  சிங்கம் போலுந்திறல் வாய்ந்த அக் குமரனுக்குச் சிறப்பாகிய பிரதாபந்தன் எனப் பெயரிட்டழைத்தனர்.        (10)

பிரிதிவிதேவி குழந்தையுடன் பரமன் ஆலயம் அடைதல்

50. பிரிதிவிழ் தேவி யோர்நாள் பெருங்குழுத் தேவி மாரும்
  அரியநற் பரமன் கோயி லன்புடன் போக வெண்ணி
  விரிநிற மலருஞ் சாந்தும் வேண்டிய பலவு மேந்திப்
  பரிவுள தனையற் கொண்டு பாங்கினாற் சென்ற வன்றே.

ஓர் நாள் பிரிதிவிதேவி ஏனைய பெரிய தேவிமார் கூட்டத்தோடு தொழுதற்கரிய பரம ஈசன் கோயிற்குப் பத்தியோடும் வழிபாடியற்றக் கருதி, அழகிய மணமலர்களும் வாசனைச் சாந்தமும் பல பொற்றட்டுகளில் ஏந்தியவளாய், அன்பார்ந்த குமரனையும் அழைத்துக் கொண்டு போய் ஆலயம் அடைந்தாள்.       (11)

ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்

51. சிறுவன்றன் சரணந் தீண்டச் சினாலயங் கதவு நீங்கப்
  பிறைநுதற் றாதி தானும் பிள்ளைவிட் டுட்பு குந்தாள்
  நறைமலர் வாவி தன்னு ணற்சுதன் வீழக் காணாச்
  சிறையழி காதற் றாயுஞ் சென்றுடன் வீழ்ந்தா ளன்றே.

அக் கோயிற் கதவிலே அச் சிறுவன் பாதம் பட்ட அளவில் கதவங்கள் திறந்தன.  பிள்ளையை வெளியே விட்டுவிட்டு, பிரிதிவிதேவியேயன்றித் தாதியும் உள்ளே சென்று கடவுள் வழிபாடு செய்தனர்.  அச்சமயம் ஆண்டுள்ள நாகவாவியுள் நாககுமாரன் நழுவி விழுந்து விட்டான். அதைக் கண்ட தாயும் சேயின் வாஞ்சையால் சென்று உடன் வீழ்ந்துவிட்டாள்.            (12) 

52. கறைகெழு வேலி னான்றன் காரிகை நீர்மே னிற்பப்
  பிறையெயிற் றரவின் மீது பெற்றிருந் தனையற் கண்டு
  பறையிடி முரச மார்ப்பப் பாங்கினா லெடுத்து வந்து
  இறைவனை வணங்கி யேத்தி யியன்மனை புகுந்தா னன்றே.

ஊன் கறை படிந்த வெற்றிவேல் ஏந்திய சயந்தரன் மனைவி நல்வினையால்    யாதொரு  தீங்குமின்றி நீரின்மேலே நின்றாள்,  நீரிலே