பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 21 -

மூழ்கினாளில்லை, பின்னையும் பாம்பினால் தீங்குற்றாளில்லை.  பிறைச் சந்திரனைப் போலும் நச்சுப் பற்களையுடைய அவ் வரவம் தன் பணா முடிமேல் பாதுகாப்பாகப் புதல்வனைத் தாங்கிக் கொண்டிருந்தது.  அவ்வதிசயம் கண்டவர்கள் அரசனுக்கு அறிவிப்ப, அரசனும் வியந்து பறையோசை போலும் இடிபோலும் ஆனந்த பேரிகை முழங்க அவர்களை அழைத்துக் கொண்டுவந்து மீண்டும் இறைவனை வாழ்த்தி வணங்கித் தன் அரண்மனை அடைந்தான்.             (13)

நாககுமாரன் எனப் பெயர் பெற்றது

53. நாகத்தின் சிரசின் மீது நன்மையிற் றரித்தென் றெண்ணி
  நாகநற் குமர னென்று நரபதி நாமஞ் செய்தான்
  நாகநே ரகலத் தானை நாமகட் சேர்த்தி யின்ப
  நாகவிந் திரனைப் போல நரபதி யிருக்க மந்நாள்.

நாகமானது அங்கு யாதோர் இடுக்கணும் செய்யாமல் தன் சிரசின்மீது தாங்கிக் காப்பாற்றியதால் நற்குணமிக்க நாககுமாரன் இவன் என அவனுக்கு அரசன் பெயரிட்டு, மலைக்கு நட்பாகிய மார்பனாகிய அக் குமாரனுக்கு முதலில் சகலகலாவல்லியைத் திருமணஞ் செய்வித்து, பவணேந்திரனைப்போல இன்புற வாழுநாளில் பவணேந்திரன்-இந்திரருள் ஒருவன் (மணி.27, 171, அரும் பதவுரை). நாமகட் சேர்த்தலாவது மைந்தனுக்குக் கல்வியையும் கலைகளையும் பயிற்றுவித்தலாகும்.  சீவகசிந்தாமணியிலே சீவகன் கல்விப் பயிற்சிபெறும் செய்திகளைக் கூறும் பகுதி ‘நாமகள் இலம்பகம்‘ எனப் பெயரிட்டழைக்கப்படுகின்றது.  இங்கே திருத்தக்க தேவர் பின்வருமாறு இந்நிகழ்ச்சியை வருணிப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.(14)

மழலையாழ் மருட்டுந் தீஞ்சொன்
  மதலையை மயிலஞ் சாயற்
  குழைமுக ஞான மென்னுங்
  குமரியைப் புணர்க்க லுற்றார்.       (நாமகள் 339)

  அரும் பொனு மணியு முத்துங்
  காணமுங் குறுணி யாகப்
  பரந்தெலாப் பிரப்பும் வைத்துப்
  பைம்பொன்செய் தவிசி னுச்சி
  இருந்துபொன் னோலை செம்பொ
  னூசியா லெழுதி யேற்பத்
  திருந்துபொற் கண்ணி யார்க்குச்
  செல்வியைச் சேர்த்தி னாரே.       (நாமகள் 340)