பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 22 -

கின்னரி-மனோகரியரின் இசைத் திறம் அறிதல்

54. கின்னரி மனோக ரீயென் கெணிகைநற் கன்னி மாரும்
  அன்னவர் தாயும் வந்தே யரசனைக் கண்டு ரைப்பார்
  என்னுடைச் சுதையர் கீத மிறைவநின் சிறுவன் காண்க
  என்றவள் கூற நன்றென் றினிதுடன் கேட்கின்றாரே.

ஓர் நாள் பஞ்சசுகந்தனி என்னுங் கணிகை கின்னரி மனோகரி எனும் சிறந்த தன் கன்னியர் இருவருடன் வந்து அரசன் அடி பணிந்து, ‘அரசே!என் குமாரிகளாகிய இவர்கள் வீணைவித்தையில் தமக்கு நிகரானவர் எவருமிலர் என இறுமாப்பெய்துகின்றனர்.  இவர்கள் புலமையைக் கூர்ந்து, திறமை மிக்கவள் யாரெனக் கூறும் காளையர் யாருமில்லை.  ஆதலால், இவர்களுடைய இசைத் திறமையை நின் குமாரன் கண்டு, ஆராய்ந்து, புலமை மிகுந்தவர்களைத் தேர்ந்து கூறுமாறு செய்தருள வேண்டும்.  இசைப் புலமை அறிந்து கூறவல்லானுக்கே இவர்கள் மனைவிமார்களாதற்குரியர்‘ என்றாள்.  அவ்வாறே அரசன் ஏற்பாடுசெய்ய அனைவருமிருந்து இசைக் கலையின் தரத்தைக் கேட்கலுற்றனர்.    (15)

55. இசையறி குமரன் கேட்டே யிளையவள் கீத நன்றென்
  றசைவிலா மன்னன் றானு மதிசய மனத்த னாகித்
  திசைவிளக் கனையாள் மூத்தாள் தெரிந்துநீ யென்கொ லென்ன
  வசையின்றி மூத்தா டன்னை மனோகரி நோக்கக் கண்டேன்.

    இசைக் கலையில் தலைசிறந்த நாககுமாரன், அவ்விரு கன்னியர்களின் இசைத் தரத்தை மிகக் கூர்ந்து நோக்கி, ‘இளையவள் இசையே இனிது‘ என்றான்.  மன்னனும் அசைவற்று வியந்தவனாய், யான் கண்டவகையில் இருவரும் ஒத்த புலமை வாய்ந்தவர்களே. எனினும், மூத்தவள் திசை விளக்குப் போல அவள் புலமை அறியாத திசையில்லை. ஆதலின், அவர்களுள் வேற்றுமை நீ எவ்வாறு கண்டுணர்ந்தாய்‘ எனக் கேட்க, அதற்கவன், ‘யாழை மீட்டி வாசிக்கும் போது மூத்தவள் வேறோன்றையும் நோக்காமல் கீழ்நோக்கியே பாடினாள்.  இளையவளோ தான் திறமையாக வாசித்ததோடமையாது மூத்தாளின் இசையும் பாட்டும் பொருளும் ஒருங்கே கூர்ந்து நோக்கினாள்.  இக்குறிப்பால் அறிந்தேன்‘ என்றான்.  அனைவரும் மெச்சினார்கள்.          (16)

நாககுமாரன் அம் மங்கையரை மணத்தல்

56. பலகல மணிந்த வல்குற் பஞ்சநற் சுகந்த னீயும்
  துலங்குதன் சுதையர் தம்மை தூய்மணிக் குமரற் கீந்தாள்
  அலங்கல்வேற் குமரன் றானு மாயிழை மாதர் தாமும்
  புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்தின்பக் கடலு ளாழ்ந்தார்.