பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 23 -

உடனே பல கலன் அணிந்த பஞ்சசுகந்தனி என்னும் கணிகை மாது தன் புத்திரிகள் இருவரையும் சிந்தாமணி போன்ற நாககுமாரனுக்கு வேள்வி விதியால் கொடுத்தாள்.  தம்பதிகள் மூவரும் ஒன்று கூடி ஐம்புலமிக்க போகம் துய்த்து இன்பக் கடலுள் மூழ்கலானார்கள்.  (17)

நாககுமாரன் யானையையும் குதிரையையும் அடக்குதல்

57. நாகமிக் கதங்கொண் டோடி நகர்மாட மழித்துச் செல்ல
  நாகநற் குமரன் சென்று நாகத்தை யடக்கிக் கொண்டு
  வேகத்தின் விட்டு வந்து வேந்தநீ கொள்க வென்ன
  வாகுநற் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் ளென்றான்.

இங்ஙனமிருக்க-ஓர் நாள் நீலகிரி என்னும் பட்டத்து யானை மதங்கொண்டு கட்டுத்தறியை முறித்துக் கொண்டு, வெளிப்போந்து, மக்களையும் மாளிகைகளையும் அழித்துச் சென்றது.  அதைக் கண்டு மாந்தர் அரசனிடம் முறையிட்டனர்.  அரசன் மூத்த புதல்வன் சிரீதரனை ஏவினான்.  அதை அடக்க அவனால் முடியவில்லை.  பிறகு நாககுமாரனை ஏவ, அவன் அதன் மதத்தை அடக்கி விரைவில் ஊர்ந்து போய் அரசன் எதிரில் நிறுத்தினான்.  அரசன் வியந்து, ‘இவ்வியானையை அடக்கி வெற்றியடைந்தவன் நீயேயாதலால், நீயே இதனைக் கொள்வாயாக என அவனுக்கே வெகுமதியாக வழங்கினான்.  (18)

58. மற்றோர்நாட் குமரன் றுட்ட மாவினை யடக்கி மேற்கொண்
  டுற்றவூர் வீதி தோறு மூர்ந்துதீக் கோடி யாட்டி
  வெற்றிவேல் வேந்தற் காட்ட விழைந்துநீ கொள்க வென்றான்
  பற்றியே கொண்டு போகிப் பவனத்திற் சேர்த்தி னானே.

மற்றோர் நாள் நாககுமாரன் ஓர் பொல்லாக் குதிரை எதிர்ப்பட்டாரையெல்லாம் வாயாற் கடித்தும் காலால் கொன்றும் தன் இச்சைப்படியே திரிந்து வருவதைக் கண்டு, நகர மக்கள் அரசனிடம் முறையிட்டனர்.  அரசனும் நாககுமாரனை ஏவ, அவனும் அதனை அடக்கி மேலேறி, நகர வீதிகள் தோறும் ஊர்ந்து சென்று, பல திசைகளிலும் சவாரி செய்து காட்டி, முடிவில் அரசனெதிர்கொண்டு போய் நிறுத்தினான்.  அரசனும் மகிழ்ந்து அக் குதிரையை அவனுக்கே சன்மானமாக அளித்தான்.  அவனும் தன் குதிரை லாயத்தே கொண்டுபோய்ச் சேர்த்தான்.     (19)