பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 24 -

நாககுமாரன் பெருமைத் திருமகனாக விளங்குதல்

59. அறவுரை யருளிச் செய்த வம்முனி குறித்த நான்குந்
  திறவதி னெய்தி நல்ல சீர்கலைக் கடலை நீந்திப்
  படுமதக் களிறுந் தேர்மா புகழ்பெற வூர்ந்து மூன்றாம்
  பிறையது போல்வ ளர்ந்து பீடுடைக் குமர னானான்.

இங்ஙனம் பிகிதாசிரவ முனிவர் கூறியருளிய அறவுரையிற் குறிப்பிட்ட கோயிற்கதவம் திறக்கப்படுதல், நச்சுவாவியில் வீழ்தல், யானையடக்கல், குதிரையடக்கல் என்ற நான்கு அறிகுறிகளும் தவறாமல் நடந்தன.  நாககுமாரன் சகல கலைக் கடலையும் கரைகண்ட புலமை மிக்கவனாய் யானை, தேர், குதிரைகளை ஏறித் தன்னைப் பலரும் புகழும்படி ஊர்ந்து காட்டி, மூன்றாம் பிறைபோல் இனிது வளர்ந்து பெருமைமிக்க திருமகனாக விளங்கினான்.  நிற்க--     (20)

விசாலநேத்திரை பொறாமையால் மகன் சிரீதரனிடம் சொன்ன சொற்கள்

60. தூசுநீர் விசாலக் கண்ணி சுதனைக்கண் டினிது ரைப்பாள்
  தேசநற் புரங்க ளெங்குந் திகழ்பணி குமரன் கீர்த்திப்
  பேசொணா வகையிற் கேட்டேன் பெருந்தவ மில்லை நீயும்
  ஏசுற விகழொன் றின்றி யினியுனைக் காக்க வென்றாள்.

நாககுமாரன் அடைந்துவரும் சீரையும் சிறப்பையும் கேட்கக் கேட்கக் களிப்பின்றி உளம் கொதித்துப் பொறாமையே குடிகொண்ட விசாலநேத்திரை, தன் குமாரன் சிரீதரனை நோக்கி, இனிது எடுத்து இயம்புகின்றாள்.  ‘குமாரனே! நீயோ பட்டத்துக்கு உரியவன். எனினும், உன்னைப் புகழ்வார் ஒருவரும் இல்லை.  நாககுமாரனைப் பற்றியே நாடு நகரம் எல்லாம் புகழ்கின்றது.  அச்சிறப்பை என் வாயால் கூற முடியவில்லை.  அதற்குரிய நற்றவம் உனக்கு வாய்க்கவில்லை போலும்.  உன்னைப் பலரும் வசையாடுகின்றனர்.  புகழ் இல்லாமல் வாழ்தல் உனக்கு அழகல்ல.  இனி உனக்கு இடையூறு இன்றிப் பாதுகாத்துக் கொள்வாயாக‘ என்று கூறினாள். (21)

சிரீதரன் நாககுமாரனைக் கொல்லச் சமயம் பார்த்திருத்தல்

61. சிரிதரன் கேட்டு நெஞ்சிற் செய்பொரு ளென்னென் றேகி
  குறிகொண் டாயி ரத்தினோரைக் கொன்றிடு மொருவ னாகச்
  செறியுமைஞ் ஞூறு பேருஞ் சீர்மையிற் கரத்தி னாரை
  யறிவினிற் கூட்டிக் கொண்டு வமர்ந்தினி திருக்கு மந்நாள்.