பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 25 -

தாய் சொற்கேட்ட சிரீதரனும் நாககுமாரன் மேல் மேலும்மேலும் பொறாமை குடிகொள்ள, இனி அவனை யாங்ஙனம் வெல்லலாம் எனச் சதியாலோசனை செய்து வெளிச்சென்று, ஒவ்வொருவரும் தத்தம் தோள்வலியால் எதிர்த்த ஆயிரம் வீரர்களை ஒருங்கே கொல்லும் ஆற்றலுடைய ஐந்நூறு மல்லர்களைத் தனக்குத் துணையாகத் திரட்டிக் கொண்டு இவர்களுடைய பலத்தால் நாககுமாரனைக் கொல்லும் சமயம் எப்போது வாய்க்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.     (22)

நாககுமாரன் நீர்விளையாடலும் பிரிதிவிதேவி அவண் போதலும்

வேறு

62. குமரனுநன் மாதருங் குச்சமென்னும் வாவியுள்
  மமரநீரி லாடவே வன்னமாலை குங்குமஞ்
  சுமரவேந்திப் பட்டுடன் றோழிகொண்டு போகையிற்
  சமையுமாட மீமிசைச் சயந்தர னிருந்ததே.

ஓர் நாள் நாககுமாரன் தன் மனைவியர் இருவரோடும் நகரின் அருகேயுள்ள ‘குச்சம்‘ என்னும் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்தனன்.  அவ்வமயம் அவன் தாயார் பிரிதிவிதேவி அவர்கட்கு வேண்டிய உண்டியும் உடையும் பூமாலையும் குங்குமமும் பொற்றட்டுகளில் ஏந்தித் தோழியையும் உடன் அழைத்துக்கொண்டு வீதி வழியே சென்று கொண்டிருந்தாள்.  அப்போது சயந்தரமன்னன் தன் மாளிகையின் மேனிலையில் வீற்றிருந்தான்.             (23)

விசாலநேத்திரை சயந்தரனிடம் பொய்யுரை பகர்தல்

63. வேந்தன்பக் கங்கூறுநல் விசாலநேத் திரையவள்
  போந்தனள் மனைவியாற் புணருஞ்சோரன் றன்னிடம்
  பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக் கரைமிசை
  யேந்திழையா ணிற்பக்கண் டினிச்சுதன் பணிந்ததே.

பொறாமையே உளத்திற்கொண்ட விசாலநேத்திரையானவள் உடனே அரசனைக் கண்டு, ‘அரசே! தங்கள் காதலியாகிய பிரிதிவிதேவி ஓர் கள்ள நாயகனைப் புணர்ந்து வருகின்றாள்.  அவனுக்கு நாடோறும் உண்டியுடை முதலியவெல்லாம் கொண்டுபோய்க் கொடுத்து வருகிறாள்.  இன்றும் அவற்றை எடுத்துக் கொண்டு தன் தோழியுடன் வீதிவழியே செல்கின்றாள், பார்!‘ எனச் சுட்டிக்காட்டினாள்.  அரசனும் ஐயுற்று அவள் போக்கைக் கவனித்து உற்று நோக்கிக்   கொண்டிருந்தான்.  பிரிதிவிதேவியோ