பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 27 -

தேவியின் சோர்வும் நாககுமாரன் உலாப்போதலும்

66. அரசனுரைத் தேகினா னகமகிழ்வு மின்றியே
  சிரசிறங்கித் துக்கமாய்ச் சீர்கரத் திருந்தனள்
  விரகுநற் குமரனும் வியந்துவந்து கேட்டனன்
  அரசனுரை சொல்லக்கேட் டானைமிசை யேறினான்.

அரசன் கட்டளையிட்டு ஏகியதைக் கண்ட பிரிதிவிதேவி மிக்க சோகமும் துயரமும் அடைந்தவளாய்த் தன் வலக்கரத்தின் மேலே தலைசாய்த்த வண்ணமாய்த் துக்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.  இந் நிகழ்ச்சிகளை அன்பார்ந்த நாககுமாரன் கேள்வியுற்று வியப்படைந்தவனாய், விரைந்து சென்று தாயை வணங்கி, ‘நீ துயரப்படுவதற்குக் காரணம் என்னவென்று கேட்டான்.  அதற்கு அவள், ‘அப்பா! இன்று முதல் உலகிலே நின் புகழ் பரவுவதற்கு வழியில்லை.  நீ கூண்டில் அடைப்பட்ட கிளியே ஆனாய்.  நீ இனி நகர்ப்புறத்தே சென்று நீராட்டு முதலியன விளையாடக்கூடாதாம்.  மாளிகைக்குள்ளேயே அடைபட்டுக் கிடத்தல் வேண்டுமாம்.  இது அரசன் இட்ட கட்டளை.  இதற்காகவே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்‘ என்றாள். இதைக் கேட்ட நாககுமாரன், அரசன் மேல் அடங்காச் சீற்றங் கொண்டவனாய், ‘நீலகிரி‘ என்னும் யானை மீது ஏறி வெளிப்போந்தான்.  (27)

67. வாத்திய முழங்கவு மதவாரண மடக்கவும்
  ஏத்தரிய வீதிதொறு மீடில்வட்ட சாரியும்
  பார்த்தரிய நடனமும் பல்லியங்க ளார்ப்பவே
  சீற்றமொ டுலாச்செலச் சீரரசன் கேட்டனன்.

    பல வாத்தியங்கள் முழங்கவும் மதமிக்க யானையை அடக்கவும் வீதிதோறும் கண்டோர் வியந்து, புகழ்தற்கரிய நிகரற்ற வட்டசாரியோட்டிக் காட்டியும், பல்லியம் முழங்கப் பகுத்துணர்தற்கரிதாகிய நடனமாடலும் கண்ட சயந்தர மன்னன் இங்ஙனம் சீற்றத்தோடு நகருலாச் செல்லவல்லோன் யாவன் என்று வாயிற்காவலனை விரைந்து கேட்டான்.     (28)

அரசன் சினந்து நாககுமாரனின் நற்பொருள் கவரச்செய்தல்

68. நன்னடியார் சொல்லினர் நாகநற் குமரனென்
  இன்னுரையை மீறின னினியவன் மனைபுகுந்து
  பொன்னணிக ணற்பொரு ணாடிமிக் கவர்கொள
  என்றரசன் கூறலு மினப்பொருள் கவர்ந்தனர்.