பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 29 -

சூதில் தோற்ற சிற்றரசர்கள் முதலிய பலரும் அரசவையில் கொலுவீற்றிருக்கின்ற அரசர்க்கரசனாகிய சயந்தரனைக் காணச் சென்று வணங்கினர்.  அரசன் அவர்களை நோக்கி, ‘அரசர்களே! உங்கள் மார்பணி மாலைகள் எங்கே?  முத்து மாலைகள் எங்கே?  கைக்கடகங்கள், வாகுவலயங்கள் எல்லாம் எங்கே?  நீங்கள் இக்கோலத்துடன் வரக் காரணம் யாது?‘--எனக் கேட்க.   (31)

நாககுமாரனுடன் ஆடிய சூதில் தந்தை இருமுறை தோற்றல்

71. சூதினாற் செயித்துநின் சுதனணிகள் கொண்டனன்
  சூதிலாட வென்னுடன் சுதனழைப்ப வந்தபின்
  சூதினிற் றுடங்கிநற் சுதனுந்தந்தை யன்பினிற்
  சூதிரண்டி லாட்டினுஞ் சுதன்மிகச் செயித்தனன்.


 ‘அரசே! நாங்கள் நின்மகன் நாககுமாரனோடு விளையாட்டாகச் சூதாடி முறையே யாங்கள் அனைவரும் தோல்வியுற்றோம்.  வெற்றியடைந்த குமாரன் அவற்றைக் கொண்டு போய்விட்டான்‘ என, அரசன் ஆச்சரியமடைந்தவனாய்த் தானும் அவனோடு சூதாடி, அவற்றைக் கொள்ளக் கருதிப் பிள்ளையை வரவழைத்து, அன்புகூர இன்னுடையாடிச் சூதாடத் தொடங்கினான்.  இருமுறை சூதாடினார்கள்.  இரண்டிலும் நாககுமாரனே வெற்றியடைந்தான்.  வெற்றியடைந்ததும், இவ்வளவு போதுமானதெனத் திருப்தியோடு மேற்கொண்டு ஆடாமல் நின்றான்.  தோல்வியுற்ற தந்தையாகிய மன்னன் தான் அணிந்திருந்த அணிகலன்களையும் பாண்டாகாரத்தையும் இழந்தான்.  ஏனைய எஞ்சலாயின.   (32)

தாயின் மனையில் கவர்ந்துசென்ற பொருளைமட்டும் கொண்டு
ஏனைய பொருள்களை உரியவர்க்கே அளித்தல்

72. இனியசூதி லாடலுக் கிசைந்ததேச மன்னரை
  இனியதாயப் பொருள்களை யியல்பினாற் கொடுத்துடன்
  தனையனும் மனைபுகுந்து தாய்பொருட் கொடுத்தபின்
  அணியரச ராரமு மவரவர்க் களித்தனன்.

வெற்றியடைந்த குமாரன் வேந்தன் பொன்னறைக்குச் சென்று அனைத்தையும் கொண்டானில்லை.  முன்னம் தன் இனிய தாய் மனையிற் கவர்ந்த பொருள்களையும் அணிகளையும் தன்னுடன் சூதாடித் தோற்ற மன்னர் எண்ணாயிரவர்களின் அணிகளையும் கைக்கொண்டு வந்து, தாய்க்குரிய பொருள்களைத் தாயிடங் கொடுத்தான்.  சூதில் வென்ற கலன்களையும் அவரவர்க்கு வழங்கினான்.  அனைவரும் அகமகிழ்ந்து போற்றினார்கள்.    (33)