பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 30 -

புதிய மாளிகையில் நாககுமாரன் குடிபுகுதல்

73. மன்னவன்றன் னேவலான் மாநகர்ப் புறத்தினின்
  நன்னகர் சமைத்தினிதின் நற்சுத னிருக்கவென்
  றன்னகரி னாமமு மலங்கரிய புரமெனத்
  தன்னகரின் மேவுங்பொற் றாரணிந்த காளையே.

மன்னன் இனி நாககுமாரனுடைய வெளிவிளையாட்டங்களைத் தடுப்பதால் பயன் ஒன்றும் இல்லை எனக் கருதி, உடனே கொல்லர்களை அழைத்து அந் நகர்ப்புறத்தே ஓர் அழகிய அரண்மனை சமைக்குமாறு கட்டளையிட்டான்.  அங்ஙனம் சமைத்த அவ்வரண்மனையில் நாககுமாரன் நயந்து குடியேறச் செய்தான்.  அதற்கு ‘அலங்கரிய புரம்‘ எனப் பெயரிட்டு அழைக்கலானான்.  அன்று முதல் நாககுமாரன் அம் மனையில் வசித்து வரலாயினான்.(34)

(இரண்டாம் சருக்கம் முற்றும்)