பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 31 -

மூன்றாம் சருக்கம்

கவிக்கூற்று

74. அரிவையர் போகந் தன்னி லானநற் குமரன் றானும்
  பிரிவின்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
  பரிவுட னினிதி னாடிப் பாங்கினாற் செல்லு நாளில்
  உரிமையாற் றோழர்வந்து சேர்ந்தது கூற லுற்றேன்.

அலங்கரியபுரத்தே நாககுமரன் தன் தேவிமாரோடும் தனித்துப் பிரிவின்றி அன்போடு வனவிளையாட்டும் புனல் விளையாட்டும் புரிந்து, இனிதே இன்புற்றுக் களித்து வருநாளில், ஊழால் அவனுக்குத் தோழர்கள் வந்து சேர்ந்த வரலாற்றைக் கூறத் தொடங்குகிறேன்.       (1)

நாககுமாரனின் தோழர் வரலாறு

75. பாரணி சூர சேனம் பண்ணுதற் கரிய நாட்டுள்
  ஊரணி கொடிக ளோங்கு முத்தர மதுரை தன்னில்
  வாரணி கொங்கை மார்க்கு மாரனேர் செயவர் மாவின்
  சீரணி தேவி நாமஞ் செயவதி யென்ப தாகும்.

பாரிலே மிகச் சிறந்த ஒப்பனை செய்தற்கரிய சூரசேனம் என்னும் அழகிய நாட்டிலே ஒப்பற்ற அழகிய வெற்றிக்கொடி நாட்டிய தலை நகரம் வடமதுரை என்பதாகும்.  அதை அரசிருக்கையாகக் கொண்டு செயவர்மன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.  அவனுடைய அழகால் மங்கையருக்கு மன்மதனைப் போன்றவன்.  அவனுடைய கற்புக்கரசியாகிய கோப்பெருந்தேவி செயவதி எனப்படுவாள்.    (2)

வியாள-மாவியாளரின் தோற்றம்

76. வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாளமா வியாள ரென்னுஞ்
  சேர்ந்திரு புதல்வர் தோன்றிச் செவ்வியாற் செல்லு நாளில்
  காந்திநற் றவத்தோர் வந்தார் கடவுணேர் தூம சேனர்
  வேந்தன்வந் தடிவ ணங்கி விரித்தொன்று வினவி னானே.