பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 3 -

என் சொற்களைத் தத்தம் அறிவினால் ஏற்றுக் கொள்வார்.  அவ்வாறு ஏற்காதவர் மிக அரியராவர். உலகத்தவரும் கூர்ந்து கேட்கும் வண்ணம் சொல்வது என் பொறுப்பாகும்.         (3)

கேட்போர் பெறு பயன்

4. வெவ்வினை வெகுண்டு வாரா விக்கிநன் கடைக்கும் வாயகள்
  செவ்விதிற் புணர்ந்து மிக்க செல்வத்தை யாக்கு முன்னங்
  கவ்விய கரும மெல்லாங் கணத்தினி லுதிர்ப்பை யாக்கும்
  இவ்வகைத் தெரிவு றுப்பார்க் கினிதுவைத் துரைத்து மன்றே.

    கொடிய வினைகள் உருத்தெழுந்து வந்து சேரா. அவற்றின் வாய்கள் விக்கி நன்றாக அடைக்கும். நன்றாகச் சேர்ந்து மிகுந்த பொருளைச் சேர்க்கும். முன்பாகப் பற்றிய வினைகள் எல்லாம் கணப் பொழுதில் விட்டு நீங்கிப் போகும்.  இவ்வகையில் ஆராய்ந்து பார்ப்பார்க்கு இனிதாக வைத்து இவற்றைப் பேசுகிறோம்.   (4)

மகத நாட்டுச் சிறப்பு

5. நாவலந் தீப நூற்றை நண் ணுதொண் ணூறு கூறில்
  ஆவதன் னொருகூ றாகு மரியநற் பரத கண்டம்
  பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி்
  மேவுமின் முகில்சூழ் சோலை மிக்கதோர் மகதநாடு.

    நாவலந் தீவைச் சேர்ந்த நூற்றுத் தொண்ணூறு பகுதிகளுள் ஒன்றாகும் கிடைத்தற்கரிய நல்ல பரத கண்டம்.  இது பாவலராம் கவிஞரும் பண்புகளால் நிறைந்தோரும் பரவி வாழ்கின்ற தரும பூமி.  இதில் உள்ள மகத நாடு மின்னலோடு கூடிய மேகங்கள் வந்து சூழ்ந்து தங்குகின்ற சோலைவளம் மிக்கது.        (5)

இராசமாகிரிய நகரம்

6. திசைகளெங் கெங்குஞ் செய்யாள் செறிந்தினி துறையு நாட்டுள்
  இசையுநற் பாரி சாத வினமலர்க் காவுஞ் சூழ்ந்த
  அசைவிலா வமர லோகத் ததுநிக ரான மண்ணுள்
  இசையுலா நகர மிக்க விராசமா கிரிய மாமே.

    எல்லாத் திக்குகளிலும் திருமகள் நிறைந்து மகிழ்ந்து வாழும் தகைமையது அந்த மகத நாடு. பல்வகை இசையும் பாரிசாத மலர்கள் நிறைந்த   பூங்காக்களும்   உடையதாய்   நடுக்கமற்ற   தேவருலகத்திற்கு