பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 4 -

ஒப்பாக இப் பூமியுள் புகழ்பெற்ற நகரமாக விளங்கியது மகத நாட்டின் தலைநகராகிய இராசமாகிரியம்.     (6)

7. கிடங்கரு கிஞ்சி யோங்கிக் கிளர்முகில் சூடிச் செம்பொன்
  கடங்கள்வைத் திலங்கு மாடங் கதிர்மதி சூட்டி னாற்போல்
  படங்கிடந் தல்கு லார்கள் பாடலோ டாட லாலே
  இடங்கொண்ட வின்ப மும்ப ரிடத்தையு மெச்சு மன்றே.

    அகழியின் அருகில் மதில் மிகவும் உயர்ந்து நின்றதால் பொங்கி யெழும் மேகக் கூட்டங்களை அம் மதில் தாங்கி நிற்கிறது. செம்மையான பொற் கலசங்கள் வைக்கப் பெற்றதனால் விளக்க முற்றிருக்கும் மாடங்கள்.  அவற்றில் ஒளிமிக்க முழுமதியை அணிந்தாற்போல பாம்பின் படம் போன்ற அல்குலினையுடைய மடவார் பாடலும் ஆடலும் நிகழ்த்தினர்.  ஆதலால், விரிந்து பரந்த இன்பத்தினாலே தேவருலகத்தையும் குறைபடச் செய்யும் இயல்பினதாயது அந் நகரம்        (7)

சிரேணிக ராசனின் செங்கோலாட்சி

8. பாரித்த தன்மை முன்னம் பாலித்தற் கைம்ம டங்காம்
  பூரித்த தார்கள் வேய்ந்த பொற்குடை யெழுந்த மேகம்
  வாரித்த திசைந்த ளிக்கும் வண்கையம் பொற்றிண் டோளான்
  சீரித்த தலங்கல் மார்பன் சிரேணிக ராசனாமே.

    இவ்வுலகைத் தாங்கி அரசாண்ட தன்மை முன்புளோர் காலத்திலும் ஐந்து மடங்காகச் சிறந்தது என்று சொல்லுமாறு பொலிவு பெற்ற மாலைகள் கட்டப் பெற்ற அழகிய குடையை உடையனாய், மேகம் மழை பொழிந்தாற்போல் பொருளை வாரி அவரவர் விரும்பியதை அளிக்கும் வளப்பம் பொருந்திய கையையும் அழகிய திண்மையான தோளையும் சிறப்பான மாலையை அணிந்த மார்பையுடையனாய் விளங்கியவன் சிரேணிகராசன் என்னும் பெயருடையான்.            (8)

9. ஆறிலொன் றிறைகொண் டாளு மரசன்மா தேவி யன்னப்
  பேறுடை நடைவேற் கண்ணாள் பெறற்கருங் கற்பி னாள்போ
  வீறுடைச் சாலி னீதா மிடைதவழ் கொங்கை கொண்டை
  நாறுடைத் தார ணிந்த நகைமதி முகத்தி னாளே.

    ஆறிலொரு பங்கு குடிமக்களிடம் வரி பெற்று அரசாளும் இம்மன்னனின் தேவி பெயர் சாலினீ. இவள் அன்னப்பறவை போன்ற நடையினைப் பெற்றவள்.  வேல் போன்ற கூரிய கண்ணையுடையவள், பெறுதற்கரிய கற்பினையுடையாள்.  இதனால் மிக்கமதிப்புடையவளாய் இவள் இலங்கினாள். மலர்மாலை கிடந்து அசைகின்ற முலைகளையும்