பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 5 -

கொண்டையையும் உடையவள், மணம் பெற்ற மாலையை அணிந்தவள். விளங்குகின்ற முழுமதி போன்ற முகத்தினையுடையாள்.

தாம்-தாமம்; இடைக்குறை.

10. மற்றுமெண் ணாயி ரம்பேர் மன்னனுக் கினிய மாதர்
  வெற்றிவேல் விழியி னாரும் வேந்தனு மினிய போகம்
  உற்றுடன் புணர்ந்து வின்பத் துவகையு ளழுந்தி யங்குச்
  செற்றவர்ச் செகுத்துச் செங்கோற் செலவிய காலத் தன்றே

    சாலினியைத் தவிர மேலும் அம் மன்னனுக்கு இனிமை சேர்த்த மாதர் எண்ணாயிரம் பேர் இருந்தனர்.  வெற்றிவேல் போன்ற நீண்ட நெடுங் கண்ணுடையராகிய அந்த மாந்தர் அரசனுக்கு இனிய இன்பம் சேர்ப்பாராய், அவனுடன் கூடிச் சேர்ந்து அவனை உவகைக் கடலுள் அழுந்தச் செய்தனர். மன்னன் மாதர் இன்பம் துய்த்ததோடு பகைவர்களையும் அழித்துச் செங்கோலைச் செலுத்தி வந்தான். அந்நாளில்-  (10)

வரவீரநாதரின் வருகையை வனபாலன் தெரிவித்தல்

11. இஞ்சிசூழ் புரத்து மேற்பா லிலங்கிய விபுல மென்னும்
  மஞ்சிசூழ் மலையின் மீது வரவீர நாதர் வந்து
  இஞ்சிமூன் றிலங்கும் பூமி யேழிறை யிருக்கை வட்டம்
  அஞ்சிலம் பார்க ளாட வமரருஞ் சூழ்ந்த வன்றே.

    மதில் சூழ்ந்த இராசமாகிரிய நகரத்தின் மேற்குத் திசையில் விளங்கிய விபுலம் என்னும் மலையின்மேல் வரவீரநாதராகிய வர்த்தமான மகாவீரர் எழுந்தருளியிருந்தார்.  மும்மதில்கள் விளங்கும் பூமியில் ஏழிறை இருக்கை வட்டமாகிய சமவசரவணத்தில் அவர் அமர்ந்திருந்தார்.  அங்கே அழகிய சிலம்பு அணிந்த மாதர்கள் மகிழ்ந்தாடி வரத் தேவரும் வந்து சூழ்ந்தனர்.  (11)

12. வனமிகு வதிச யங்கள் வனபாலன் கண்டுவந்து
  நனைமது மலர்க ளேந்தி நன்னகர் புகுந்தி ராசன்
  மனையது மதிற்க டந்து மன்னனை வணங்கிச் செப்ப
  மனமிக மகிழ்ந்தி றைஞ்சி மாமுர சறைக வென்றான்.

    காட்டிலே நிகழ்ந்த இந்த அதிசயத்தை வனத்தைக் காவல் புரியும் வனபாலன் என்பான் கண்டான்.  அவன் தேன் சொட்டும் மலர்களை ஏந்திக் கொண்டு, அழகிய நகராகிய இராசமாகிரியம் புகுந்து, அரசனுடைய அரண்மனை மதில்களைக் கடந்து சென்று,