பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 33 -

மாவியாளன் இருவரும் இனிது அரசாண்டாரில்லை.  அமைச்சன்மேல் அரசுரிமையை வைத்தவராய்த் தாம் சேவை செய்தற்குரிய இறைவன் யாவன் எனத் தேடிச் சென்று முடிவில் நாக லோகத்துக்கு நிகராகியதோர் பாடலிபுர நகரை அடைந்தார்கள்.     (5)

பாடலிபுர மன்னன் மகளிரை அவ்விருவரும் மணத்தல்

79. நன்னகர்க் கிறைவ னல்ல னாமஞ்சிரீ வர்ம னாகுந்
  தன்னவன் றேவி பேருந் தக்கசிரீ மதியா மம்பொற்
  கிண்ணம்போல் முலையாள் புத்ரி கேணிகாசுந் தரியென் பாளாம்
  விண்ணுறை தேவர் போல வியாளமா வியாளர் வந்தார்.

அந் நகருக்கு இறைவனுடைய நாமம் சிரீவர்மன் என்பான்.  அவனுடைய மாதேவியின் பேர் தகுதிவாய்ந்த சிரீமதி என்பாள்.  அப் பொற் கிண்ணம் போன்ற கொங்கையுடைய இவளுடைய மகளின் பேர் கணிகை சுந்தரி என்று கூறுவார்கள்.  அந் நகரின் வீதி வழியே தேவருலகத்துறையும் தேவர்களைப் போலும் சிறப்புடைய வியாளன் மாவியாளன்என்ற  அவ்வரச குமாரர்கள் இருவரும் சென்றார்கள்.     (6)

80. மன்ன னைக்கண் டிருப்ப மாவியாளன் றகமை கண்டு
  தன்னுடையப் புதல்வி தன்னைத் தானவற் கொடுத்துத் தாதி
  துன்னிய மகளி தன்னைச் சுந்தரி வியாள னுக்கு
  மன்னியற் கொடுப்ப மன்ன ரிருவரு மின்புற் றாரே.

சென்ற இருவரும் அரசனாகிய சிரீவர்மனைக் கண்டு வணங்க அரசனும் நல்லாசி கூறி, ஓர் ஆசனத்து அமரச் செய்து, இன்னுரை முகமன் கூறி, அவர்களுடைய அங்க அடையாளங்களால் அரச குமாரர்கள் என்பதை ஊகித்துணர்ந்து, அவர்களுள் இளையோனாகிய மாவியாளனுக்குத் தன் மகள் கணிகை சுந்தரியையும் மூத்தவனாகிய வியாளனுக்குத் தன் தாதியின் மகளாகிய இலளிதாசுந்தரியையும் வேள்வி விதிப்படியே திருமணம் செய்து கொடுக்க இருவரும் இன்புற்று இருந்தனர். (7)

நாககுமாரனை வியாளன் காண, அவன் நெற்றிக்கண் மறைதல்

81. சிறுதினஞ் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து
  நறுமலர்க் கோதை வேலான் நாகநற் குமரற் கண்டு
  சிறுமலர் நெற்றிக் கண்ணுஞ் சேரவே மறையக் கண்டு
  சிறியன்யா னின்னா னென்றான் செல்வனு மகிழ்வுற் றானே.