பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 35 -

தன்னோடு போர்புரியுமாறு அறைகூவினன்.  குமாரனும் யானையேறிச் சென்று போர் தொடங்கினான்.  இச்செய்தியைத் தந்தையாகிய சயந்திரமன்னன் கேள்வியுற்றுத் தன் மந்திரி நயந்தரனைச் சென்று குமாரர்களைப் போர் புரியாவண்ணம் சமாதானம் செய்யுமாறு ஏவினான்.  அவனும் சென்று ஏற்பக் கூறிப் போரை நிறுத்தினான்.  கொலைத் தொழில் ஒழிந்து அமைதி நிலவிற்று. (10)

மன்னனின் ஆணை கேட்ட நாககுமாரனின் மறுமொழி

84. நாகநற் குமரற் கண்டு நயந்தர னினிய கூறும்
  வேகநின் மனைக்குச் சூரன் வெகுண்டவன் வந்தா னென்ன
  போகநீ தேசத் தென்று புரவலன் சொன்னா னென்ன
  ஆகவே யவன்முன் போகி லவ்வண்ணஞ் செய்வ னென்றான்.

நயந்தர அமைச்சன் நாககுமாரனைக் கண்டு இனிய சொற்களால், ‘குமரனே! நீ நின் மனைக்குமட்டுமே சிறந்த சூரனாயிருக்கின்றாய் போலும்! இன்றேல் வேற்றுநாட்டினும் சென்று நின் வீரியத்தைக் காட்டுவாயன்றோ?  உடன்பிறந்தானோடன்றோ போர் புரிகிறாய்.  வியாளன் சிரீதரன் சேனைகளை வதைத்தானாதலால் சிரீ்தரன் வெகுண்டு போருக்கு வந்தான்.  அவனோடு போர் புரிதல் முறையன்று.  நீங்கள் இருவரும் இந் நகரிலே உறைவீராயின் என்றும் உங்கட்கு இகல் ஒழிதல் அரிது.  ஆதலின் நீ இன்றே வேற்று நாடு போதல் வேண்டும்.  இது என் சொந்த உரையன்று.  நின் தந்தை உரையாகும்‘ என்றான்.  இதைக் கேட்ட குமரன் வருத்த முற்றானில்லை.  போதற்கொருப்பட்டு, நயந்தரனை நோக்கிச், ‘சிரீதரன் இன்னும் போனபாடில்லை.  பொரக் கருதியே நிற்கின்றான் போலும்.  அவன் முன் தன் மனைக்குச் சென்றால் யானும் போவேன்‘ என்றான். (11)

நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்

85. நயந்தரன் சென்று ரைப்பா னல்லறி வின்றி நீயே
  செயந்தனி லொருவன் கையிற் சேனைதன் மரணங் கண்டும்
  நயந்தறி யாத நீயே நன்மனை புகுக வென்றான்
  பயந்துதன் சேனை யோடும் பவனத்திற் சென்ற வன்றே.

உடனே நயந்தரன் சிரீதரன் பால் சென்று, ‘அப்பா நீ அறிவிலியாகவல்லவோ இருக்கின்றாய்.  நின் சேனை யாவுங்கூடி ஒருவனை வெல்ல முடியவில்லை.  அவ்வொருவன் கைவலியாலேயே நின் சேனைகள் யாவும் மாண்டன.  அவ்வொருவனே வெற்றிபெற்றான்.