பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 36 -

அதை நிதானித்து அறியும் நுண்ணறிவு நினக்கு இல்லை,  இன்னும் பொர விழைகின்றாய்,  பொருதால் வறிதே பொன்றுவாய்.  ஆதலால் விரைந்து நின் மனைக்கு ஏகிவிடுவாயாக‘ எனக் கடிந்துரைத்தான்.  சிரீதரனும் பயந்தவனாய்த் தன் சேனையோடும் சென்று மாளிகை அடைந்தான். (12)

நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்

86. தந்தையா லமைச்சன் சொல்லத் தானுந் தன்றாய்க் குரைத்து
  தந்திமேன் மாதர் கூடத் தோழனுந் தானு மேறி
  நந்திய வியாள னன்னூர் மதுரை யிற்புக் கிருந்து
  அந்தமி லுவகை யெய்தி அமர்ந்தினி தொழுகு நாளில்.

தந்தையின் ஏவலால் மந்திரி சொல்லக் கேட்ட நாககுமாரனும் தன் மனைபுக்கு நற்றாயைக் கண்டு, ‘அம்மா! இனி நான் இந் நகரை விட்டு வேற்றுநாடு செல்ல வேண்டுமாம்.  இக் கட்டளை மந்திரி வாயிலாகத் தந்தையிட்டது.  ஆதலால், நான் போதல் வேண்டும்‘ எனத் தாயினிடத்தே விடைபெற்றுக் கொண்டு தானும் தேவிமார்களுமாக வேழமேறிப் புறப்பட்டுப் போந்து, வியாளனூராகிய வட மதுரைக்குச் சென்று, ஆங்கே தேவதத்தை என்னும் ஓர் மாதருடைய மனையில் தங்கி, அளவற்ற மகிழ்ச்சியோடு உறைவாராயினர்.

ஓர்நாள் நாககுமாரன் கடைத்தெரு வளப்பத்தைக் காணப் புறப்பட்டான்.  அவனை நோக்கி, தேவதத்தை, ஐயனே! கன்னியா குச்சம் எனும் நகர்க்கதிபதியாகிய மன்னன் செயவர்மன், மனைவி குணவதி, இவர்கட்குப் புத்திரி சுசீலை.  இப் பெண்ணைச் சிம்மபுர மன்னன் அரிவர்மனுக்குத் திருமணஞ் செய்து கொடுக்க ஒரு மனப்பட்டனர்.  அதைக் கேள்வியுற்ற இந் நகர்க்கரசன் துட்டவாக்கியன், அப்பெண்ணைத் தான் மணக்க விரும்பிச் சென்று, அவளைக் கவர்ந்து கொடுவந்து சிறையிட்டுள்ளான்.  அவளோ விருப்பமின்றிக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறாள்.  நீ அதைக் கண்டு ஐயுறல் வேண்டா.  நின் காரியத்தைக் கடைப்பிடித்துப் போய் வருவாயாக‘ என்றாள்.      

அதைக் கேட்ட நாககுமாரன் ஆங்கடைந்து காவல்புரியும் போர்வீரர்களை அச்சமுறுத்தித் துரத்திவிட்டுத் தன் வீரர்களை வைத்து அவளுக்குப் புகலிடம் தந்தான்.  அதனால் துட்டவாக்கியன் வெகுண்டு நாககுமாரன் மேல் போர் தொடுக்கலானான்.  அப் போரில் தனக்கு எதிரியாக.