பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 39 -

வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்

92. குன்றெனத் திரண்ட தோளான் குமரனுங் கேட்டுவந்து
  சென்றந்த வால யத்திற் சினவரற் பணிந்து நின்று
  வென்றந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
  முன்னந்த மண்ட பத்தின் முகமலர்ந் தினிதி ருந்தான்.

குன்றம்போல் திரண்ட தோள்வலிவுடைய நாககுமாரன் அதைக் கேட்டு அகமகிழ்ந்து, அவ்வதிசயத்தைக் காண விரும்பிச் சென்று, அவ்வாலயத்திலுள்ள அருகனை வணங்கித் தொழுது நின்று கொண்டு பல துதிகள் செய்து, முகமலர்ச்சியோடு அவன் வருகையை எதிர்ப்பார்த்துக் கொண்டு ஆங்குள்ள முன் மண்டபத்தில் காத்திருந்தான்.      (19)

வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்

93. பூசலிட் டொருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
  ஓசனிக் கின்ற தென்ன வொருதனி நின்ற நீயார்
  ஆசையென் மனைவி தன்னை யதிபீம வசுரன் கொண்டு
  பேசொணா மலைமு ழஞ்சுட் பிலத்தினில் வைத்தி ருந்தான்.

உச்சிப் போதில் ஒருவன் வந்து ஓவெனப் பூசலிட்டு அலறினான்.  நாககுமாரன் அவனை நோக்கி, ‘அப்பா! நீ யார்?‘ என்று கேட்க, அதற்கு அவன், ‘ஐயா! என் காதலியைப் பீமன் என்னும் ஓர் அசுரன் கைப்பற்றிக் கொண்டு சென்று பயங்கரமான இருண்டதோர் மலைக்குகையுள் வைத்திருக்கின்றான்.        (20)

94. இரம்மிய வனத்துள் வாழ்வே னிரம்மிய வேட னன்பேன்
  விம்முறு துயர்சொற் கேட்டு வீரனக் குகைகாட் டென்னச்
  செம்மையிற் சென்று காட்டச் செல்வனுஞ் சிறந்து போந்து
  அம்மலைக் குகைவாய் தன்னி லண்ணலு முவந்து நின்றான்.

‘யான் இரம்மியவேடன் என்பேன், இரம்மிய வனத்துள் வாழ்கின்றேன்‘ என விம்முற்றுத் துயரப்பட்டு அழுதான்.  அதைக் கேட்ட குமாரன், ‘அப்பா! அழ வேண்டா.  யான் நின் துயரைப் போக்குகிறேன்.  விரைந்து எனக்கு அக் குகையைக் காட்டு‘ என வேடனும் அழைத்துக் கொண்டுபோய் சேணிலிருந்தே அக் குகையைச் சுட்டிக் காட்டினான்.  நாககுமாரனும் அஞ்சானாய் அக் குகை வாயில் முன் நின்றான்.       (21)