பக்கம் எண் :

Nagakumara Kavium


நாககுமார காவியம் - 41 -

குமரனும் அங்குச் சென்றான்.  உடனே அங்குள்ள சுதர்சனை எனும் ஓர் இயக்கி தோன்றி, அவன் பாதங்களை வணங்கி, ‘ஐயனே! வெள்ளியம் பெருமலைத் தென் சேடியிலே அளகாபுரி எனும் ஓர் நகர் உளது.  அந் நகருக்கு அரசன் ‘ஜிதசத்துரு‘ என்பான்.  அங்கவன் எங்களைப் பெற வேண்டி பன்னீராண்டுக் கடுந்தவம் புரிந்தான்.  அதனால் என்னோடு நாலாயிரம் இயக்கிகள் அவனுக்கு உழைய ரானோம்.

அக் கணத்தே அவன் செவியில் முரசொலி ஒன்று கேட்டது.  அவன் அதை அறியவேண்டி எங்களில் ஒருத்தியாகிய அவலோகினி எனும் வித்தையை ஓதினான்.  அதன் சாதனத்தால் அம்முரசொலி முனிசுவிரதரின் கேவலோத்பத்தியில் தேவர்களால் முழக்கப்பட்டது எனத் தேர்ந்து சென்று அறவுரை கேட்டு, வாழ்க்கையில் வைராக்கியங் கொண்டு துறவு வேண்டினான்.

‘யாங்கள் அனைவரும் ஒன்றுகூடி, நீ எங்களை வேண்டித் தவம் புரிந்தாய், எங்கள் ஏவலை ஏற்றுக் கொள்கிறதுமில்லை.  துறவு பூண்கிறேரே.  இனி யாங்கள் யாருக்கு ஏவல் புரிதல் வேண்டும்‘ எனக் கேட்டோம்.  அவரும் கேவலிபாற் சென்று அறிந்து மீண்டு, ‘தெய்வங்களே! இனிவரும் நேமிதீர்த்தகரர் காலத்தில் இங்கு நாககுமாரன் எனும் ஓர் அரசிளங்குமரன் வருவான்.  அவனுக்கு ஏவல் செய்ம்மின்‘ எனப் பணித்தார்.         (23)

97. இனியுனக காள ரானோ மீரி ரண்டா யிரவர்
  எனவவள் சொல்ல நன்றென் றினியொரு காரி யத்தின்
  நினைவன்யா னங்கு வாவென் னீங்கிநற் குமரன் வந்து
  வனசரன் றன்னைக் கண்டு வதிசயங் கேட்பச் சொல்வான்.

ஆதலால், நாங்கள் நாலாயிரவரும் இனி உனக்கு ஆளர் ஆயினோம்.  எங்கள் ஏவலை ஏற்றுக் கொள்வீராக என்றனள்.  அதற்கு அவன், ‘தெய்வங்களே! ஒன்று நீங்கள் இங்கேயே இருமின்.  யான் வேண்டுங்காலத்தே வாருங்கள்‘  எனப் பணித்து அவைகளிடம் விடைபெற்று, மீண்டும் அவ் வேடனைக் கண்டு, இன்னும் யாதேனும் அதிசயம் உளதோ எனக் கேட்க வனசரன் சொல்கிறான்.      (24)

வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்

98. வாள்கரஞ் சுழற்றி நிற்பான் வியந்தர னொருவ னென்னக்
  காலினைப் பற்றி யீர்ப்பக் கனநிதி கண்டு காவ
  லாளெனத் தெய்வம் வைத்து வருகனா லையத்துட் சென்று
  தோளன தோழன் கூடத் தொல்கிரி புரத்தைச் சேர்ந்தான்.