பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 45 -

    

நான்காம் சருக்கம்

சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப்
பணிந்து வேண்டுதல்

102. சுப்பிர திட்ட மெனும்புர மாள்பவன்
  செப்பு வன்மை செயவர்ம ராசன்றன்
  ஒப்பில் பாவையு மோவியம் போற்செம்பொன்
  செப்பு நேர்முலை யாணற் செயவதி.

சுப்பிர திட்டம் என்னும் நகரை ஆளும் மன்னன் சொல்லாற்ற லுடைய செயவருமன்.  அவனுடைய ஒப்பிலா அழகுமிக்க சித்திரப் பாவை போன்ற தேவி ஜெயவதி என்பர்.    (1)

103. மக்கட் சேத்திய பேத்திய ரென்றிவர்
  மிக்க செல்வத்தின் மேன்மையிற் செல்லுநாள்
  பக்க நோன்புடை பரம முனிவரர்
  தொக்க ராசன் தொழுதிட் டிறைஞ்சினான்.

இவர்களுடைய மக்கள் அசேத்தியர் அபேத்தியர் என இருவர் செல்வமுஞ் செழிப்பும் மிக்கோராய் பெருமையேறி வாழுநாளில், அந் நகர்ப்புற வனத்தே பட்ச உபவாசமுடைய குணத்தால் உயர்ந்த பிகிதாஸ்வர முனிவர் வந்து தங்கி அறம் பகர்ந்தார்.  செயவருமன் என்னும் மன்னனும் சென்று, அவருடைய திருவடித் துணை வணங்கி இறைஞ்சினான்.  அசேத்தியர்-சேதிக்க முடியாதவர்,  அபேத்தியர்-பேதிக்க முடியாதவர்.  கோடிபடர்.        (2)

104. இருவ ரென்சுத ரென்னுடை ராச்சிய
  மருவி யாளுமோ மற்றொரு சேவையோ
  திருவுளம் பற்றித் தேர்ந்தறி விக்கெனத்
  திருமுடி மன்ன செப்புவன் கேளென்றார்.