பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 46 -

அங்ஙனம் இறைஞ்சி, ‘முனிவர் பெருமானே! என் குமாரர்கள் கோடிபடர்கள்.  இருவரும் சுதந்திரமாக என் அரசை ஆண்டு வருவார்களா என்பதைத் தாங்கள் திருவுள்ளம் பற்றி நன்கு தேர்ந்து விளக்குவீராக‘ என, அவரும், ‘அரசே! கூறுகிறேன் கேட்பாயாக‘ என்று அருளிச் செய்கின்றார்  (3)

முனிவர் மன்னனுக்கு உரைத்தவை

105. புண்டிர மெனும்புரப் புரவ லன்றனைக்
  கண்டிறந் துந்திடுங் காவ லன்றனை
  யண்டிநற் சேவையா ராவ ராமெனப்
  பண்டிறத் தவத்தவர் பண்ணுரை கேட்டபின்.

எவன் ஒருவன் சோமப் பிரபனைப் புண்டவர்த்தன புரத்தினின்றும் துரத்தி அரசை வனராஜனுக்குக் கொடுப்பானோ அவனே இவர்கட்குப் பிரபு ஆவான். இவர்கள் அவனைக் கண்டு யாது சேவை என வேண்டி அவன் ஏவல் செய்வார்கள் எனப் பண்பட்ட அருந்தவ முனிவரின் இன்னுரை கேட்ட பிறகு-      (4)

செயவர்மன் புதல்வரின் அரசாட்சி

106. மக்கண் மிசைநில மன்னவன் வைத்துடன்
  மிக்கு ணத்துவம் வீறுடன் கொண்டுதன்
  நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்
  தக்க புத்திரர் தாரணி யாளுநாள்.

ஜயவருமன் மக்கள் அசேத்திய-அபேத்தியர்மிசை தன் அரசாட்சியை வைத்து முடிசூட்டினான். உடனே துறந்து பொருண்மைத்துவம், உருவத்துவம், குணத்துவங்களைக் கைக்கொண்டு வீறுபெற நோற்றுப் பழவினை பரியச் சலியாத பிரதிமாயோகத்தே நின்று நற்கதியடைந்தான்.  தகைமை சான்ற புத்திரர்கள் உலகாளும் நாளிலே--                    (5)

சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல்

107. நல்ல ருந்தவச் சோமப் பிரபரும்
  எல்லை யில்குண விருடிக டம்முடன்
  தொல்பு கழ்ப்புரஞ் சுப்பிர திட்டத்தின்
  நல்ல காவி னயந்திருந் தார்களே.