பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 49 -
113. அரிவர ராசன் றேவி யருந்ததி யனைய கற்பின்
  மிருகலோ சனையென் பாளா மிக்கநன் மகடன் பேருஞ்
  சுரிகுழற் கருங்கண் செவ்வாய்த் துடியிடைக் குணவ தீயைப்
  பிரவிச் சோதன னிச்சித்துப் பெருநகர் வளைந்த தன்றே.

அரிவரன் என்னும் அம் மன்னனுடைய தேவி அருந்ததி போலும் கற்புக்கரசி மிருகலோசனை என்பாள்.  இவர்களுடைய நற் குணமிக்க புதல்வி குணவதி எனும் பேருடையாள்.  சுருண்ட குழலும் கரிய கண்ணும் சிவந்த வாயும் உடைய அக் கட்டழகியைச் சிந்துதேசாதிபதி சண்டப் பிரத்தியோதனன் மணக்க விரும்பி, அதிப்பிரசண்டன் முதலிய கோட்படர்களாகிய தன் படை பலத்தோடும் வந்து, அந் நகரை வளைய முற்றுகையிட்டான்.       (12)  

114. நாகநற் குமரன் கேட்டு நாற்படை யோடுஞ் சென்று
  வேகநற் போர்க்க ளத்தில் வெற்றிகொண் டவனை யோட்டி
  நாகநல் லெருத்தின் வந்து நகர்புகுந் திருப்ப மிக்க
  போகமிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்த தன்றே.

அதைக் கேள்வியுற்ற நாககுமாரன் தன்னுடைய யானை, தேர், குதிரை, காலாளாகிய நால்வகைப் படைகளோடும் சென்று, கோபாவேசம் மிக்க போர்க்களத்திலே கடுஞ்சமர் புரிந்து, அவனைப் புறமுது கிட்டோடச் செய்து, உயிர்ப் பயம் பொருட் பயம் அகற்றித் தம் நகர்ப்புக்கு வாழ்வருளி, வெற்றிமாலை சூடி, யானைமீது ஏறி வெற்றி முரசார்ப்ப நகரை அடைந்தான்.  புரவலனும் அளவற்ற மகிழ்ச்சியோடு போகோபபோகம் மலிந்த தன் மகள் குணவதியை வேள்வி முறைப்படித் திருமணம் செய்து கொடுத்தான்.   (13)

நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல்

115. வேல்விழி யமிர்தன் னாளை வேள்வியா லண்ண லெய்திக்
  கால்சிலம் போசை செய்யக் காமனும் ரதியும் போலப்
  போனமும் போக மெல்லாம் பருகியின் புற்று நாளும்
  நூனெறி வகையிற் றுய்த்தார் நுண்ணிடை துவள வன்றே.

ஆடவரிற் சிறந்த நாககுமாரன் வேல் போன்ற கண்களையும் அமுதம் போன்ற மொழியினையுமுடைய குணவதியோடு காமனும் இரதியும்போல நுண்ணிடை துவளவும் கால் சிலம்பு ஒலிக்கவும் கட்டித் தழுவி நாடோறும் காமநூல் விதிப்படி போக உபபோகங்களை நுகர்ந்து இன்புற்று மகிழலானான்.         (14)