பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 51 -

வணங்கி வழிபடுவோர்கள் தேவராய்ப் பிறந்து தேவருலகாண்டு ஆயுள் முடிவில் வந்து இப் பூமண்டலத்திற்கு மகா மண்டலேசுவரராய்ப் பிறந்து ஆட்சி புரிந்து பெரிய வெற்றியானைப் பிடரியின் முத்தணிந்த வெண்கொற்றக்குடை நிழலையளிக்கத் தலைவராக வாழ்ந்திருப்பவ ராவார்கள்.            (17)

119. கமலமலர் மீதுறையுங் காட்சிக் கினிமூர்த்தி
  யமலமலர்ப் பொற்சரணை யன்பாய்த் தொழுபவர்கள்
  இமையவர்க ளுலகத் திந்திரராய்ப் போயுதுதித்து
  இமையவர்கள் வந்துதொழ வின்புற் றிருப்பாரே.

சமவசரணத்தே தேவர்களால் இயற்றப்பட்ட பொற்றாமரை மலர் வீற்றிருக்கின்ற நற்காட்சிக் கண்ணளிக்கவல்ல இனிய பரமௌதிக திவ்விய தேகமுடைய தீர்த்தங்கரரின் களங்கமற்ற பொற்பாதங்களைப் பக்தியோடு தொழுபவர்கள் தேவருலகம் தம்மைத் தொழுது வணங்குமாறு இந்திரர்களாய் போய்ப் பிறந்து, இமையவர் தொழுது ஏவல்புரியுமாறு இன்பமுற்று இருப்பவர்களாவார்கள்.          (18)

120. அரியா சனத்தின்மிசை யமர்ந்த திருமூர்த்தி
  பரிவாக வுன்னடியைப் பணிந்து பரவுவர்கள்
  திரிலோக முந்தொழவே தேவாதி தேவருமய்
  எரிபொன் னுயிர்விளங்கி யினியமுத்தி சேர்பவரே.

சிம்மாசனத்தின் வீற்றிருக்கின்ற திருமூர்த்தியே! உன் திருவடிகளை அன்போடு பணிந்து இறைஞ்சித் துதிப்பவர்கள் மூவுலகமும் தம்மைத் தொழும்படி தேவர்க்கெல்லாம் தேவர்களாய் ஒளிமிக்க பொன்னுயிராய் விளங்கிப் பேரின்பமாகிய முக்தியையும் அடைபவர்களாவார்கள்.(19)

வில்லாளன் ஒருவனின் தூதுச் செய்தி

121. இணையிலா யிறைவனை யேத்தியிவ் வகையினாற்
  துணையினிய தோழன்மார் சூழ்ந்துட னிருந்தபின்
  கணைசிலை பிடித்தொருவன் கண்டொரோலை முன்வைத்து
  இணைகரமுங் கூப்பிநின் றினிதிறைஞ்சிக் கூறுவான்.

இணையற்ற இறைவன் திருவடிகளை இவ்வாறு ஏத்திப் போற்றித் தனக்கு இனிய உறுதுணைவராகிய தோழர்களோடு இருக்கும்போது, வில்லும் கணையும் கையிற் பிடித்த ஒருவன் வந்து, குமாரனைக்கண்டு வணங்கி ஓர் ஓலையை வைத்து இருகரங்களையும் சிறமேற் குவித்து இறைஞ்சிக் கூறலானான்.       (20)