பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 53 -

சுபசந்திரனுக்கு இளைய சகோதரனாகிய அபிசந்திரன் உன்னைத் துணையாக வேண்டி இவ்வோலையைக் கொடுத்தனுப்பினான்.  ஆதலால், நினக்கு வந்து அறிவித்தேன் என்றான்.  இவ் வரலாற்றை அறிந்தவுடனே வியாளனைக் குணவதியின் புறத்தேற விடுத்து, வித்தைகளை அழைத்துக் கொண்டு ஆகாய மார்க்கமாகச் சென்று, கௌசாம்பி அடைந்து சுகண்டனுக்குக் கன்னிகைகளை விடுவிக்குமாறு தூதுவிட்டான்.  அவனும் வெகுண்டு போருக்கெழுந்து ஆகாயத்து நின்றான்.  நாககுமாரனும் எதிர்த்துப் பெரும்போர் செய்து முடிவில் சந்திரஹாசம் என்னும் வாளால் அவனைக் கொன்று வெற்றிமாலை சூடினான்.  சுகண்டன் புதல்வன் வச்சிரகர்ணன் சரணாகதியடைந்தான்.  அவனால் இரத்தின சஞ்சயபுர மேகவாகனனைக் கொல்வித்து அவனரசை வச்சிரகர்ணனுக்கு முடிசூட்டினான்.            (24)

நாககுமாரனின் வெற்றியும் நங்கையர் பலரை மணத்தலும்

126. அபிசந் திரன்றன்புர மத்தினாக மேகியே
  சுபமுகூர்த்த நற்றினஞ் சுபசந்திரன் சுதைகளும்
  அபிசந்திரன் றன்மக ளாஞ்சுகண்டன் சுதையுடன்
  செபமந்திர வேள்வியாற் செல்வனெய்தி யின்புற்றான்.

பிறகு அபிசந்திரனுடைய தேயத்து அத்தினாபுரம் அடைந்து ஓர் நன்னாளில் அபிசந்திரன் புத்திரி சந்திரப் பிரபையையும் சுப சந்திரன் புத்திரிகள் எழுவரையும், சுகண்டன் புத்திரிகளாகிய அனுஜை உருக்குமணி இவர்களையும் வேள்விவிதிப்படி அடைந்து இன்புற்றிருந்தான்.     (25)

127. நங்கைமார்க டன்னுட னாகநற் குமரனும்
  இங்கிதக் களிப்பினா லிசைந்தினிப் புணர்ந்துடன்
  பொங்குநகர்ப் புறத்தினிற் பூவளவன் மேவியே
 

திங்கள்சேர் செய்குன் றினுஞ் சேர்ந்தினி தாடுநாள்.

இங்ஙனம் மணம் புரிந்த நங்கைமார்களோடு நாககுமாரனும் இங்கிதசேட்டையாடும் காமக்களியாட்டத்தில் மூழ்கியிருக்கும் நாளில் ஓர்நாள் அந்நகர்ப்புறத்துள்ள பூஞ்சோலையிற் புக்கு வனவிளையாட்டுமாக இன்புறுநாளில்--          (26)

அவந்திநாட்டு மேனகியை நாககுமாரன் அடைதல்

128. அவந்தியென்னு நாட்டினு ளானவுஞ்சை நீணகர்
  உவந்தமன்ன னாமமு மோங்குஞ்செய சேனனாம்
  அவன் தனன் மனைவிய ரானநற் செயசிரீ்யாஞ்
  சிவந்தபொன் னிறமகட் சீருடைய மேனகி.