பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 59 -

அதன்பின், கங்கை நதியால் வளம் பெற்றிலங்கும் கங்காள நாட்டிலே மேகமண்டலந் தவழும் மாடங்கள் மலிந்தது திரிபுவன திலகபுரம், அழகுமிக்க மணிமகுடம் தரித்த மன்னன் விஜயந்தரன்.  அவன் மாதேவி பெண்தன்மை மிக்க விஜயை என்பார்கள்.   (41)

143. இலக்கணை யெனுமக ளிலக்கண முடையவள்
  மிக்கவண்ண லுஞ்சென்று மெய்ம்மைவேள் விதன்மையால்
  அக்கணத் தவனெய்தி யவடன்போகந் துய்த்தபின்
  தொக்ககாவு தன்னுளே தொன்முனிவர் வந்தரோ.

அவர்கட்குப் புத்திரி எல்லா இலக்கணமும் நிறைந்தவளாதலால் இலக்கணை என்பாள்.  பெருமை மிக்க குமாரன் அந் நகர் அடைந்து மெய்ம்மையான வேள்வி முறையால் மணஞ்செய்து கொடுப்ப, அவளுடன் இன்பம் துய்த்து வருநாளில், அந் நகர்ப் புறத்தே யுள்ள உய்யானத்தே பிஹிதாஸ்ரவர் எனும் முனிவர் வந்து தங்கினார்.        (42)

நாககுமாரன் அங்கு வந்த முனிவரைப் பணிந்து
தன் மனக் கருத்திற்கு விளக்கம் கேட்டல்

144. ஊற்றினைச் செறித்திடு முறுதவனுடைச் சாரணை
  நாற்றமிக் குமரனு நன்புறப் பணிந்தபின்
  யேற்றவறங் கேட்டுட னிருந்தலக் கணையின்
  ஏற்றமோக மென்னென னியன்முனி யுரைப்பரே.

ஆத்மப் பிரதேசத்துச் சுரக்கும் வினையூற்றைத் தடுக்கும் அருந்தவமுனிவரை புகழ்மிக்க நாககுமாரன் சென்று முறைப்படி இறைஞ்சி ஏத்தி நல்லறங்கேட்டு மகிழ்ந்து இருந்தபின், அம் முனிவரனை வணங்கி, ‘சுவாமி! எனக்கு மனைவிமார்கள்  பலர் இருக்கின்றனர்.  எனினும், இலக்கணையின்மீது அதிக அன்பு தோன்றற்குக் காரணம் யாது எனக் கேட்க அம் முனிபுங்கவரும் அவதியால் ஓர்ந்து கூறுகிறார்.--              (43)

(நான்காம் சருக்கம் முற்றும்)