பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 61 -

கூடியிருக்கும் நாளில், நற்றவப்பண்பு மிகுந்த பரமமாமுனிவர் முனி குப்த ஆசாரியர் என்பார் அந் நகர்ப்புறத்து உய்யான வனத்துள்ள தோர் ஜிநாலயத்தில் வந்து தங்கினார்.       (3)

148. நாகதத் தன்சென் றந்த நன்முனி சரண டைந்து
  வாகுநற் றருமங் கேட்டு அனசன நோன்பு கொண்டான்
  போகபுண் ணியங்க ளாக்கும் பூரண பஞ்ச மீயில்
  ஏகனற் றினத்தி னன்று யிடர்பசி யாயிற் றன்றே.

நாகதத்தன் உடனே சென்று, அம் முனிபுங்கவரை வணங்கி, வாழ்க்கையில் வெற்றிதரும் நல்லறங் கேட்டு, பஞ்சமி உண்ணா நோன்பு விரதம் மேற்கொண்டான்.  போகங்களையும் புண்ணியங்களையும் உண்டாக்க வல்ல பூரணமானதோர் சுக்கிலபட்ச பஞ்சமி திதி விரத நாளன்று நள்ளிரவில் பசிப் பிணித்துன்பம் மேலிட்டது.                 (4)

149. தருமநற் றியானந் தன்னாற் றன்னுடை மேனி விட்டு
  மருவினா னசோத மத்தின் வானவ னாகித் தோன்றி
  வருகயல் விழியாள் நாக வசுவும்வந் தமர னுக்கு
  மருவிய தேவி யாகி மயலுறு கின்ற வன்றே.

பெற்றோர் வேண்டவும் விரதத்தை விடாமல் வடக்கிருந்து நோற்றுத் தருமத்தியானமுடையவனாய் தன்னுடலை விட்டுச் சௌதருமகல்பத்து, சூரியப்பிரப விமானத்துத் தேவனாகித் தோன்றினான்.  கயல்மீன் போன்ற கண்ணாளாகிய நாகவசுவும் அவ்வாறே நோற்று அத் தேவனுக்கு மனைவியாய்ச் சேர, மகிழ்ந்து இன்பம் நுகரலானார்கள்.          (5)

150. அங்கைந் துபல்ல மாயு வமரனாய்ச் சுகித்து விட்டு
  இங்குவந் தரச னானா யினியந்தத் தேவி வந்து
  தங்குநின் மனைவி யானாள் தவமுனி யுரைப்பப் பின்னும்
  எங்களுக் கந்த நோன்பு யினிதுவைத் தருள வென்றான்.

அத்தேவகதி ஆயுள் ஐந்து பல்லமும் தேகசுகம் அனுபவித்து இங்கு வந்து அரசன் ஆனாய் நீ.  உன்னுடைய தேவியே வந்து இலக்குமிமதி(இலக்கனை)யானாள். அதனால் அவள் உனக்கு அன்புண்டாயிற்று என்று அருளினார்.  அவ்வாறாயின் வாழ்க்கை வெற்றி தரும் அப்பஞ்சமி நோன்பை எங்கட்கும் கொடுத்தருள்வீராக என இறைஞ்சிக் கேட்டான்.      (6)