பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 62 -
நாககுமாரன் வேண்ட முனிவர் நாகபஞ்சமி நோன்பினை விளக்குதல்


151. திங்கட் கார்த்திகையி லாதற் சேர்ந்தபங் குனியி லாதற்
  பொங்கன லாடி யாதற் பூரண பக்கந் தன்னில்
  அங்குறு பஞ்சமியி னனசன நோன்பு கொண்டு
  தங்குமாண் டைந்து நோற்றான் றானைந்து திங்க ளன்றே.

கார்த்திகை மாதத்திலாதல், பங்குனி மாதத்திலாதல், வெப்பமிக்க ஆடியிலாதல் சுக்கில பக்கத்திலே நால் நாள் ஒருபோது உண்டு ஐந்தாநாள் உபவாச விரதத்தை மேற்கொண்டு ஐந்தாண்டளவும் மாதாமாதம் வரும் பஞ்சமி திதியில் நோற்றல் வேண்டும்.        (7)

152. இந்தநற் கிரமந் தன்னி லினிமையி னோன்பு நோற்று
  அந்தமி லருகர் பூசை யருண்முனி தானஞ் செய்தால்
  இந்திர பதமும் பெற்று இங்குவந் தரச ராகிப்
  பந்ததீ வீனையை வென்று பஞ்சம கதியு மாமே.

இப்போது சொல்லிய வரிசைப்படி பஞ்சமி நோன்பை இனிது மேற்கொண்டு நோற்று, எல்லையற்ற குணங்களையுடைய அருகன் பூசனையும் அருளறம் பூண்ட முனிகட்குத் தானங்களும் செய்து, அப்பலனால் இந்திர பதவியும் பெற்று, மீண்டும் இங்கு வந்து பேரசர்களாகப் பிறந்து, அருந்தவம் நோற்று, வினைக்கட்கு அறுத்து வீடு பேறும் அடையலாகும்.        (8)

முனிவர் உரைப்படி நாககுமாரன் பஞ்சமி நோன்புகொள்ள அவன் தந்தை ஏவலால் அமைச்சன் நயந்தரன் வந்து அழைத்தல்

153. என்றவ ருரைப்பக் கேட்டு யிறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை
  சென்றுதன் பவனம் புக்கான் சேயிழை யோடு மன்னன்
  நன்றுடன் செல்லு நாளு ணயந்தரன் வந்தி றைஞ்சி
  உன்னுடைத் தந்தை யுன்னை யுடன் கொண்டு வருக வென்றான்.

என்று முனிகுப்த ஆசாரிய முனிவர் கூறியருளக் கேட்ட நாககுமாரன் வணங்கி நன்றெனப் பஞ்சமி நோன்பு விரதங் கைக்கொண்டு, தன் மனைவியோடும் விடைபெற்றுக் கொண்டு மீண்டு தன் அரண்மனை அடைந்து இனிதிருக்கும் நாளில், நயந்தரன் என்னும் அமைச்சன் வந்து குமாரனை வணங்கி, ‘குமாரனே! உன்னுடைய தந்தை உன்னை உடனழைத்துக் கொண்டு வாவென என்னை அனுப்பினார்.  ஆதலால், நீ வருக!‘ என்றான்.            (9)