பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 64 -

சென்றவிடமெல்லாம் சிறப்பாக வேள்வி முறைப்படி திருமணம் செய்து கொண்ட வேல்விழி மங்கையர்களை யெல்லாம் ஒருசேர வருக என அழைப்புவிட, அவர்களும் வந்து சேர்ந்தார்கள்.  சித்திரப் பாவையரைப் போன்ற அவ்வழகிய மாதர்களோடு இனிது இன்பந்துய்த்துக் குமாரன் இருக்கலானான்.  அவன் தந்தை சயந்தரனும் வாழ்க்கை நிலையாமையை நன்கு உற்று நோக்கி, வைராக்கியமுற்று அகப்பற்று புறப்பற்றறத் துறந்து நாட்டாட்சியை மகன் வைக்கலானான்.                 (12)

157. நாககும ரன்றனக்கு நன்மகுடஞ் சூட்டிப்
  போகவுப போகம்விட்டுப் புரவலனும் போகி
  யாகம னடைக்குமுனி யவரடி பணிந்து
  யேகமன மாகியவ னிறைவனுருக் கொண்டான்.

நாககுமாரனுக்கு மணிமகுடஞ் சூட்டி, அரச பாரம் ஏற்கச் செய்து போக உபபோகம் துய்த்தலை விட்டுத் துறந்துபோய் யோகப் பயிற்சியால் மனவசன காயச் செயலை அடக்கி நோற்கும் பிஹிதாசிரவ முனிவருடைய பாதங்களை வணங்கித் தொழுது, பல சிற்றரசர்களுடனே துறவு பூண்டு ஒருமனமுடையவனாகி இறைவனுடைய இயற்கையுருவத்தைப் பற்றறத் துறவை மேற்கொண்டான்.             (13)

பிரிதிதேவியும் துறவுபூண்டு நற்பேறு பெறுதல்

158. இருவினை கெடுத்தவனு மின்பவுல கடைந்தான்
  பிரிதிவிநற் றேவியுந்தன் பெருமகனை விட்டு
  சிரிமதி யெனுந்துறவி சீரடி பணிந்து
  அரியதவந் தரித்தவளு மச்சுத மடைந்தாள்.

சயந்தர மன்னனும் அருந்தவத்தால் காதியகாதிகளாகிய இரு வினைகளையும் கெடுத்து இன்ப உலகமாகிய தேவருலத்தை அடைந்தான்.  அவன் மனைவி பிரிதிவிதேவியும் தன் பெருமை சான்ற குமாரனை விட்டுப் பிரிந்து போய், சிரீமதி என்னும் ஆரியாங்கனையை வணங்கித் துறவு மேற்கொண்டு அருந்தவம் புரிந்து அச்சுத கற்பத்தை அடைந்தாள்.        (14)