பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 65 -

நாககுமாரன் வியாளன் முதலிய தோழர்களுக்குத் தேயங்கள்
அளித்தலும், தன் மனைவியருள் இலக்கணையைப்
பட்டத்தரசி யாக்குதலும்

159. வேந்தனர்த்த ராச்சியம் வியாளனுக் களித்தான்
  ஆய்ந்தபல தோழர்களுக் கவனிக ளளித்துக்
  சேர்ந்ததன் மனைவியருள் செயலக் கணைதன்னை
  வாய்ந்தமகா தேவிபட்டம் வன்மைபெற வைத்தான்.

நாககுமாரனும் பாதி இராச்சியத்தை வியாளனுக்குக் கொடுத்தான்.  ஏனைய பல தோழர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்பப் பல தேயங்களை உரிமையாக்கினான்.  தான் மணந்த மங்கையருள் இலக்கணைக்கு மாதேவிப் பட்டங் கொடுத்துத் தலைமையாக்கினான். (15)

இலக்கணையார் வயிற்றில் புதல்வன் பிறத்தல்

160. இலக்கணையார் தன்வயிற்றி னற்சுதன் பிறந்தான்
  மிக்கவன்ற னாமமு மிகுதேவ குமாரன்
  தொக்ககலை சிலையியிற் பயின்றுமிகு தொல்தேர்
  ஒக்கமிக் களிறுடனே வூர்ந்துதினஞ் சென்றான்.

இலக்கணையார் வயிற்றில் ஓர் நல்ல ஆண்மகன் பிறந்து நலமுற்றிருந்தான்.  அழகுமிக்க அவனுடைய திருநாமம் தேவகுமாரன் என்பதாகும்.  அவன் அரசர்க்குரிய கலை, சிலை, வேல் முதலியவற்றைக் கற்றுப் பயின்றும் யானை, குதிரை, தேர் ஏறி ஊர்ந்தும் களிப்புற்றுத் தினமும் செல்லும் நாளில்-             (16)

நாககுமாரன் மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல்

161. புரிசையெழ நிலத்தின்மிசை பொற்புற விளங்கும்
  அரியவரி யாசனத்தி லண்ணல் மிகஏறி
  எரிபொன்முடி மன்னர்களெண் ணாயிரவர் சூழ
  இருகவரி வீசவினி யெழில்பெற விருந்தான்.

பெருமை சிறந்த நாககுமாரன் மகாமண்டலேசுவரனாய் எழுமதில் சூழ்ந்த நிலத்திலே அழகாக விளங்கும் செயற்கரிய சிம்மாசனத்தின் ஏறி ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற பொன்முடி மன்னர் எண்ணாயிரம்பேர் தன்னைப் புடைசூழ இருமருங்கும் கவரிவீச, இனிது அழகுபெற 108 ஆண்டுகள் செங்கோலோச்சியிருந்தான்.   (17)