பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 79 -

கிரிகூடபுரம்: பூமிதிலகம் என்னும் சினாலயம் இருக்கும் மலையின் பக்கத்தில் உள்ளது. நாககுமாரன் தன் மனைவி திரிபுவனாரதியும் தோழன் வியாளனும் உடன் வரச் சினாலயம் சென்று வழிபட்டு, ஆங்கு வேடன் மனைவியை விடுத்து, இயக்கியமார் நாலாயிரவரைப் பணி கொண்டு, வியந்தர வேதாளத்தை வீழ்த்தி, மீண்டும் சினாலயம் வழிபட்டான்.  அதன்பின் நாககுமாரன் தன் மனைவியுடனும் தோழனுடனும் அருகிலுள்ள இந்தக் கிரிகூடபுரம் நகரைச் சார்ந்தான்.  ஆங்கே ஓர் ஆலமர நிழலில் அமர்ந்திருந்தான் (98).

கின்னரி-மனோகரி: இவ்விருவரும் சகோதரியர்.  பஞ்ச சுகந்தனி என்னும் கணிகையின் புதல்வியர். இவ்விருவரும் வீணை வித்தையில் சிறந்து விளங்கினர்.  இவர்களோடு தாயாரும் சயந்தரன் அரசவைக்கு ஒரு சமயம் வந்தனர். தன் புதல்வியரின் இசைத் திறமையை மன்னன் புதல்வன் நாககுமாரன் தேர்ந்து கூறுமாறு செய்யவேண்டும் என்றும், இவர்களுடைய இசைப்புலமை அறிந்து கூறவல்லாருக்கே இவர்கள் உரியர் என்றும் கூறினாள்.  அரசனும் அதற்கு வேண்டுவன செய்து தந்தான்.  நாககுமாரன் அவர்களின் வீணை இசையைக் கேட்டு, இளையவள் இசையே சிறந்தது என ஏதுக்களுடன் எடுத்துரைத்தான்.  அனைவரும் பாராட்டினர்.  பஞ்சசுகந்தனி அவ்விருவரையும் நாககுமாரனுக்கு வேள்வி விதிப்படி மணஞ்செய்து கொடுத்தாள்.  நாககுமாரன் அவர்களோடு கூடி இன்பந் துய்த்து வாழ்ந்தான் (54, 56).

குச்சம்: நாககுமாரனின் நகரமாகிய கனகபுரத்தில் உள்ள ஒரு தடாகம்.  இதில் ஒருநாள் நாககுமாரன் தன் மனைவியர் கின்னரி மனோகரியருடன் நீர்விளையாடிய செய்தி இக் காவியத்தில் குறிக்கப்பட்டுள்ளது (62).

குணவதி: கிரிநகர் அரசன் அரிவரனுக்கு அவன் தேவி மிருகலோசனையிடம் பிறந்த மகள்.  இவளை விரும்பிய பிரவிச்சோதனன் என்பான் கிரிநகரின் படையெடுத்து வந்தான்.  அப்பொழுது அந்நகரில் இருந்த நாககுமாரன் நாற்படையுடன் சென்று பிரவிச்சோதனனை வென்று மீண்டான். அரசன் அரிவரன் மகிழ்ந்து, தன் மகள் குணவதியை நாககுமாரனுக்குத் திருமணஞ்செய்து கொடுத்தான் (112-114).

குமரன் (நாககுமாரன்): இவனைக் ‘குமரன்‘ என்றும் (74,96,97, 100,109,144), நாகநற்குமரன் (81,83,84,90,92,93,114,130,140) என்றும் இக் காவிய ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இவனே இக் காவியத் தலைவன்.  இவனைப் பற்றிய செய்திகளை ‘நாககுமாரன்‘ என்னும் தலைப்பின்கீழ்க் காண்க.

கேணிகா சுந்தரி: கணிகை சுந்தரி என்றும் வழங்குபவர்: பாடலி புரமன்னன் சிரீவர்மனுக்கும் அவன்தேவி சிரீமதிக்கும் பிறந்த புதல்வி. மன்னன் தன் நகருக்கு வந்து தன்னைக் கண்ட அரசகுமாரர்களாகிய வியாள-மாவியாளர் இருவருள் இளையவனாகிய மாவியாளனின் தகைமை நோக்கி, அவனுக்குத் தன் மகள் கணிகை சுந்தரியை வேள்வி விதிப்படி மணமுடித்து வைத்தான் (73-74).