கௌதமர்:
விபுலமலைச் சமவசரணத்தைச் சார்ந்த ஒரு முனிவர். இவரை ‘நற்றவர்க்கு இறையான நற் கௌதமர்‘
என்று போற்றுகிறார் இக்காவிய ஆசிரியர். இவரிடம் ‘பஞ்சமி கதை‘யினைச் சிரேணிக
மகாராசன் கேட்டறிந்தான் (23-25).
சந்தகிரி: இது ‘சயந்தகிரி‘ எனவும் படும். நாககுமாரன் அரிவரராசன் மகள் குணவதியை மணந்து சிலகாலம்
இன்பம் நுகர்ந்து வாழ்ந்த பின் சென்று சேர்ந்த இடம். இங்குள்ள சினாலயத்தை வணங்கி
அருக தேவனை அவன் துதித்துப் போற்றினான் (15-19).
சந்திரகாந்தம்: வியந்தரதேவன்
நாககுமாரனுத் தந்த வாள் (95).
சந்திரகுப்தன்: கலிங்க நாட்டிலே பொன்மயமான மதிலால் சூழப்பட்டு இலங்கும் இரத்தினபுரத்திலிருந்து
அரசாண்டவன். இவனுடைய மனைவி பெயர் சந்திரமதி. இவர்களுக்குப் பிறந்த மகள் பெயர்
மதன மஞ்சிகை (140).
சந்திரமதி: கலிங்க நாட்டு இரத்தினபுரத்திலிருந்து அரசாண்ட மன்னன் சந்திரகுப்தனின் பட்டத்தரசி
(140).
சயந்தரன்: மகத நாட்டுள்ள கனகபுரத்தின் அரசன். இவன் மனைவி பெயர் விசால நேத்திரை.
இவர்களுடைய புதல்வன் பெயர் சீதரன். இம் மன்னனின் அமைச்சன் பெயர் நயந்தரன்
என்பதாம். சயந்தரனுக்குப் பட்டத்துத் தேவியைத் தவிர எண்ணாயிரம் மனைவியரும் இருந்தனர்.
இவன் ஒரு சமயம் வாசவன் என்னும் வணிகன் கப்பலில் வந்த ஒரு பெண்ணின் உருவத்தைத்
தன்பால் காட்டக் கண்டு, அதில் கண்ட பெண்ணின் பெரு விருப்பம் கொண்டான்.
வணிகன் சொற்படி பிரிதிதேவி என்னும் அப் பெண்ணை அவள் பெற்றோரிடமிருந்து அழைப்பித்துத்
திருமணம் செய்துகொண்டான். இவள் பெற்ற புதல்வன் நாககுமாரனே இக் காவியத்தலைவன்
நாக குமாரனின் வீர தீரச் செயல்களையும் மன்னர் பலருடன் அவன் மணவுறவு கொண்டு நட்பினைப்
பெருக்கியமையும், தோழன்மாரும் வீரரும் பலர்சூழ வாழ்ந்து வருவதையும் கண்டு தந்தை சயந்தரன்
தன் அமைச்சன் நயந்தரனைத் தூதனுப்பித் தன் நகரத்திற்கு அழைப்பித்தான். கனகபுரம்
வந்த நாக குமாரனைத் தந்தை எதிர்கொள்ள, குமரன் தாதையின் அடிமிசை வீழ்ந்து வணங்கினான்.
தந்தை மகனை ஆதரவுடன் எடுத்து அன்புடன் தழுவி அரண்மனை யடைந்து இனிதிருந்தனர். சென்ற
இடமெல்லாம் சிறப்புற வேள்வி விதிப்படி திருமணம் செய்துகொண்ட மங்கையரனைவரையும்
வருக என அழைப்புவிட அவரெல்லாரும் வந்தனர். சித்திரப்பாவை போன்ற அம்மகளிருடன்கூடி
இன்பந் துய்த்து நாககுமாரன் மகிழ்வுடன் இருந்தான். தந்தை சயந்தரன் வாழ்க்கை நிலையாமையை
நன்கு உற்றுணர்ந்து நாட்டாட்சியை மகன் நாககுமாரனுக்கு அளித்து அகப்பற்றும் புறப்பற்றும் முற்றும் விட்டுத் துறவை மேற்கொண்டான். முனிவர் அடிபணிந்து ஒருமனமுடையனாய் இறைவனுடைய இயற்கை யுருவத்தைப் பற்றத் துறவின் தலைநின்றான். இருவினைகளையும் கெடுத்து இன்பவுலகாகிய
தேவருலகத்தை அடைந்தான் (27-31, 155-158).
|