மந்திரச்சுற்றம்
முதலானவர்களோடு விபுலமலை சென்று வரவீரநாதரை வணங்கினான். யானை மீது சென்ற அரசன்
சமவசரணத்தின் மதிற்புறத்தை அடைந்ததும் அதனின்றும் இறங்கினான். தன் பட்டத்தரசியுடன்
பரமன் கோயிலை வலம் வந்து ஈசனை இறைஞ்சினான்; நல்ல பல தோத்திரங்களைச் சொல்லித்
துதித்தான். ‘த்தமானனெனுந் தீர்த்தன் நீயே‘ என்று முடியும் பல பாடல்களால்
பரமனின் புகழ் பாடினான். விபுல மலையில் இருந்த கௌதம முனிவரிடம் தரும தத்துவங்களைக்
கேட்டுணர்ந்தான் சிரேணிகராசன். இவரிடம் ‘பஞ்சமி கதை‘யினைச் சொல்லியருளுமாறு கேட்க,
அவரும் மன்னனுக்கு அச் சரிதையை விளங்கக் கூறினார் (8-25).
சீதரன்: சயந்தர மன்னனுக்கும் அவனுடைய பட்டத்தரசி விசால நேத்திரைக்கும் பிறந்த மகன். நாககுமாரனின்
நற்புகழ் கேட்ட தாய் பொறாமையால் தன் மகன் சீதரனை அழைத்துப் புகழின்றி வாழும்
நீ உன்னைக் காத்துக்கொள் என்று சொன்னாள். அதுகேட்ட சீதரன் ஐந்நூறு மல்லர்களைத்
தனக்குத் துணையாகச் சேர்த்துக் கொண்டு நாககுமாரனை வெல்லும் காலம் நோக்கியிருந்தான்.
நாககுமாரன் நகருலாப் போந்த சிறப்புக்கண்டு நகரமாந்தர் வானளாவப் புகழ்ந்தனர்.
இதனால் பொறாமையுள்ளத்தனாகிய சீதரன் நாககுமாரனைக் கொன்று வருக என ஐந்நூறு படர்களை
ஏவினான். நாககுமாரனின் காவல் தோழனாகிய வியாளன் யானைகட்டும் கம்பத்தால் அவ்வீரரை
நையப் புடைத்தான்; எல்லாரும் மாண்டு போயினர். செய்தி அறிந்ததும் சீதரன் தானே
நேரில் வந்து நாககுமாரனோடு எதிர்த்தான். ஆனை நாககுமாரனும் ஏறி அவனை எதிர்க்கவந்தபோது,
சயந்தரன் ஏவலால் மந்திரி நயந்தரன் வந்து அவர்களிருவரிடமும் நயமுறப்பேசிப் போரை
நிறுத்தினான். இதனால் கொலைத் தொழில் ஒழிந்தது (27,
60, 61, 81-85).
சுகண்டன்:
வெள்ளி மலையின் தென்சேடியில் இரத்தின சஞ்சயபுரத்தை ஆண்ட அரசன். இவன் தன்
பகைவனாகிய மேகவாகனனால் துரத்தப்பட்டு, சுபசந்திரன் நகராகிய கௌசாம்பியை அடுத்துத்
‘துல்லங்கிபுரம்‘ என்னும் நகர் அமைத்துக் கொண்டு வாழ்ந்தான். இவன் சுபசந்திரன் கன்னியர்களை
மணம் செய்ய விரும்பிக் கேட்க அவன் மறுத்தனன். அதனால் சுகண்டன் அவனைக் கொன்றுவிட்டு
அவன் கன்னியர்களைக் கவர முயன்றான். அப் பெண்களோ மறுத்து, ‘எங்கள் தந்தையைக்
கொன்ற உன்னை மணக்க மாட்டோம்; உன்னைக் கொல்பவனையே மணப்போம்‘ என்றனர். அக்
கன்னியர்களுள் நாகதத்தை தப்பி வந்து தன் பிதாவின் உடன்பிறந்த அத்தினாபுர அரசன்
அபிசந்திரனிடம் அறிவித்தாள். அபிசந்திரன் சென்று சுகண்டனைக் கொன்று அக் கன்னியர்களை
மீட்டான். அதன்பின் நாககுமாரன் அத்தினாபுரம் சென்றான். அங்கே அந் நகரத்து அரசன்
அபிசந்திரன் புத்திரி சந்திரபிரபையையும், சுபசந்திரன் புத்திரிகள் எழுவரையும், அனுஜை,
உருக்குமணி என்னும் சுகண்டன் புதல்வியர் இருவரையும் வேள்வி விதிப்படி மணஞ் செய்துகொண்டு
இன்புற்றிருந்தான் (122-126). |