பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 83 -
சுகண்டன் சுதை: சுகண்டன் என்பவன் மேகவாகனனால் தோற்றோடி வந்து, பின் கௌசாம்பியன் அருகே ஒரு நகரம் அமைத்து வாழ்ந்தான். இவன் கௌசாம்பி மன்னன் மகளை விரும்பி, அவன் கொடாமையால் அவனைக் கொன்றான். இக்காரணமாக அக்கன்னியரும் அவனை மணக்க மறுத்தனர். பின் இறந்த மன்னவனின் தம்பி அபிசந்திரனின் தூண்டுதலால் நாககுமாரன் வந்து சுகண்டனுடன் போர் செய்து அவனை அழித்தான். பின், இச் சுகண்டனுடைய அனுஜை, உருக்குமணி என்னும் இரு மகளிரை நாககுமாரனே மணந்து கொண்டான் (124-126).

சுகாவதி: வற்சை நாட்டரசன் சுபசந்திரனின் மனைவி. இவளுக்கு சுயம்பிரபை, சுப்பிரபை, சுனந்தை, கனகமாலை. நங்கை, பதுமை, நாகதத்தை என ஏழு புதல்வியர் இருந்தனர் (122, 123).

சுந்தரி: இவளை இலளிதாசுந்தரி என்றும் அழைப்பர்.  இவள் பாடலிபுரமன்னன் சிரீவர்மனின் தாதிமகள். இவளை அம்மன்னன் வியாளன் என்பானுக்கு மணஞ்செய்து கொடுத்தான் (79,80).

சுப்பிரதிட்டம்: செயவர்மராசனின் தலைநகரம் (102).

சுப்பிரபை: சுபசந்திரன்-சுகாவதி ஆகியோரின் இரண்டாவது மகள் (123).

சுபசந்திரன்: வற்சை என்னும் நாட்டின் கோநகர் கௌசாம்பியிலிருந்து அரசாண்ட மன்னன். கற்பின் மிக்க இவன் பொற்புடைத்தேவியின் பெயர் சுகாவதி. இவர்களுக்கு ஏழு புதல்வியர் இருந்தனர். அவர்களின் பெயர்களாவன: சுயம்பிரவை, சுப்பிரபை, இன்பப்பிரபை(சுனந்தை), சொர்ணமாலை (கனகமாலை), நங்கை, பதுமை, நாகதத்தை (122, 123).

சுயம்பிரபை: சுபசந்திரன்-சுகாவதி பெற்ற மகளிருள் மூத்தவள் (123).

சுராட்டிரதேசம்: புகழ்வதற்கரிய பெருஞ் சிறப்புடையது. இந் நாட்டில் உள்ள பரங்கிரியா நகரில் வாழ்ந்த ஒரு பெருஞ் செல்வன் சிரீவர்மன் (30).

சூரசேனம்: செய்வர்மா என்னும் அரசனுடைய நாடு. இதன் தலைநகரம் உத்தர மதுரை (75).

செயசேனன்: அவந்தி நாட்டு உஞ்சை நகரிலிருந்து அரசாண்ட மன்னவன்.  இவனுடைய பட்டத்தரசி பெயர் செயசிரீ. இவர்களுடைய புதல்வி பெயர் ‘மேனகி‘ என்பதாம் (128).

செயவதி  I: சூரசேன நாட்டு மன்னன் செயவர்மாவின் தேவி (75).