|
‘எவனைக் கண்டவுடன் வியாளனுடைய நெற்றிக்கண் மறைகிறதோ
அவனுக்கே அவன் சேவை செய்வான்; மகாவியாளனோ எவள் இவனைக் கண்டவுடன் அழகற்றவன்
என்று இகழ்கிறாளோ அவள் கணவனுக்குத் தொண்டுபுரிவான்‘ என்று உரைத்தார். முனிவன்
சொற்படியே பின் நிகழ்ந்தன என்பது இக்காவியத்தால் தெரியவரும் (76,
77).
தேவகுமாரன்: நாககுமாரனுக்கு அவனுடைய பட்டத்து அரசி இலக்கணையினிடமாகப் பிறந்த புதல்வன். இவன்
அரசர்க்கு உரிய கலைகளாகிய கலை, சிலை, வேல் முதலியவற்றைக் கற்றுச் சிறந்தான்.
யானை, குதிரை, தேர் ஆகியவற்றை ஏறி நடத்திப் பெருவீரனாய்த் திகழ்ந்தான் (160).
தொன்முனிவர்: திலகபுரத்தில் நாககுமாரன் இலக்கணையோடு இன்பமாக வாழும் நாளில் அங்குள்ள உய்யானத்தே
வந்தவர்; இவரை பிஹிதாஸ்வரர் என்று குறிப்பிடுவர். நாககுமாரன் இம்முனிவரிருப்பிடம்
சென்று முறைப்படி வணங்கினான். இவரிடம் நாககுமாரன் ‘சுவாமி! எனக்கு மனைவிமார் பலர்
இருக்கவும் இலக்கணையின் மீது அதிக அன்பு தோன்றுவதற்குக் காரணம் என்ன‘ என்று கேட்டான்.
அம் முனிவரும் தம் அவதி ஞானத்தால் அவனுடைய பழம்பிறப்பு வரலாறுகளை அறிந்து உரைத்தார்
(143, 144).
நங்கை:
சுபசந்திரன்-சுகாவதியரின் ஐந்தாம் மகள் (123).
நந்தனராசன்:
காம்பீரநாட்டு மன்னன்; இவன் மனைவி பெயர் தாரணி; இவர்களுடைய புதல்வியின்
பெயர் திரிபுவனாரதி; வீணை வித்தையில் இவன் மிக்க புகழ்பெற்று விளங்கினாள்
(89).
நயந்தரன்: சயந்தர மன்னனின் அமைச்சன். நாககுமாரன் கங்காள நாட்டுத் திலகபுரத்தில் இலக்கணையுடன்
இனிது வாழ்ந்து வந்த நாளில், மன்னன் ஏவலால் இவ்வமைச்சன் வந்து நாககுமாரனிடம்,
‘உன் தந்தை உன்னை அழைத்து வரப்பணித்தார்‘ என்று உரைத்தான். அதன்படியே நாககுமாரன்
தன் மனைவி இலக்கணையினோடு நாற்படை சூழ்ந்து வரவும் தோழன்மார் தொடர்ந்து வரவும்
தன் தாதை வாழும் மகத நாட்டுக் கனகபுரம் சென்றடைந்தான் (153,
154).
நாககுமாரன்: நாககுமாரன் சரிதையை ‘நற்கதை‘ என்று போற்றுகிறார் இக் காவிய ஆசிரியர்(1).
சினாலய வழிபாட்டிற்குச் சென்ற தாய் பிரிதிதேவியால் கொண்டு செல்லப்பட்ட குழந்தை
பிரதாபந்தன் அக் கோவிலின் முன்னருள்ள நாகவாவியில் விழுந்தான். அவனுக்கு அங்குள்ள
நாகம் யாதொரு இடையூறும் செய்யாமல் தன் சிரசின் தாங்கிக் காப்பாற்றியது.
அதனால் சயந்தர மன்னன் அவனை ‘நாககுமாரன்‘ என்னும் சிறப்புப் பெயரிட்டு அழைத்தான்.
இதுவே இவனுக்குரிய பெயராய்ச் சிறப்புற வழங்கலாயிற்று (50-53).
இவனைக் ‘குமரன்‘ என்றும் இக் காவிய ஆசிரியர் சில பாடல்களில் குறிப்பிடுவர் (23,
66, 69). இவன் பல மன்னர்களை வென்றதோடு,
|