பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 87 -

மங்கையர் பலரையும் மணம் புரிந்து இன்ப வாழ்க்கையிலும் திளைத்திருந்தான். பெருமையும் புகழும் பெற்று விளங்கிய நாககுமாரன் சிறந்த மகாமண்டலேசுவரனாய் எழுமதில் சூழ்ந்த பெரிய அத்தாணி மண்டபத்திலே சிம்மாசனத்தில் கொலு வீற்றிருந்தான்.  முடிமன்னர் எண்ணாயிரவர் இவனைப் புடை சூழ்ந்திருந்தனர். இருமருங்கும் கவரி வீசினர். இங்ஙனமாக இவன் 108 ஆண்டுகள் செங்கோலோச்சினான் என்பர். ஒரு சமயம் நாககுமாரன் ஆகாயத்தே பரவித் தோன்றி மறையும் மேகக் கூட்டங்களை உற்று நோக்கி விரக்தி நிலையுற்றான்; தன் மகன் தேவகுமாரனுக்கு முடிசூட்டித் தவம் புரியச் சென்றான்.  அமலமதி என்னும் கேவல ஞானியை வணங்கித் துறவு பூண்டு கடுந்தவம் புரியலானான்; தவத்தின் பயனாய் சீர்மிகு முனிவனான்.  நாககுமாரன் இறுதியில் இரு வினைகளை வென்று சித்தியடைந்தான் (161-164). நாககுமாரனுக்கு ஆயுள் ஆயிரத்து நூற்று அறுபத்து நான்கு ஆண்டாகும். இதில் குமார காலம் 300 ஆண்டு; போகமிக்கு இப்பூமியை ஆண்ட காலம் 800 ஆண்டு; நற்றவம் புரிந்த ஆண்டுகள் 64. நற்றானப் பயனால் அடையக்கூடிய போக பூமிகள் எல்லாம் உலவித் தருமோபதேசம் செய்தது 61 ஆண்டு ஆகும். பின் அகாதி வினை கெடுத்து, சித்தி நகர் அடைந்து இன்புற்றான் (167-168).

நாகதத்தன்: வீதசோகபுரத்து வணிகன் தனதத்தனுக்கு நாகதத்தைக்கும் பிறந்த மகன். இவன் அவ்வூரில் வாழ்ந்த வணிகன் வசுதத்தனக்கும் வசுமதிக்கும் பிறந்த நாகவசு என்பாளை மணந்து கொண்டான். இவன் ஒரு சமயம் தன் நகர்ப்புறத்து வந்த முனிவர் தத்தநாமரின் திருவடி சார்ந்து வணங்கித் தருமங் கேட்டான். அம் முனிவர் அவனுக்குப் போக புண்ணியங்களாக்கும் பஞ்சமி விரதத்தை எடுத்துரைத்தார். அவ்வாறே அவன் நோற்ற அந்நாளின் நள்ளிரவில் அவனுக்குப் பசி மிகவும் மேலிட்டது. தம் பெற்றோர் வேண்டவும் விடாது வடக்கிருந்து நோற்றுத் தருமத்தியான முடையனாய்த் தன்னுடலை விடுத்து சௌதருமகல்பத்துத் தேவனாயினான்.  அவனைப் போன்றே அவன் மனைவி நாகவசுவும் நோற்றுத் தன் கணவனாகிய தேவனையே மனைவியாய்ப் பெற்றாள்; இருவரும் அங்கேயும் இன்பம் நுகர்ந்தினிதிருந்தனர். தேவகதியுள் ஐந்துபல்லம் சுகமனுபவித்து மீண்டும் இவ்வுலகில் அவர் பிறந்தனர் என்றும் முனிவர் அறிவுறுத்தினார். தேவனான நாகதத்தனே இப்பொழுது அரனாக வந்துள்ள நாககுமாரன் என்றும், அவன் மனைவி வசுமதியே இப்பொழுது இலக்கணையென்னும் மனைவியாயினாள் என்றும் எடுத்துரைத்தார். இதனால்தான் நாககுமாரனுக்கு எல்லா மனைவியரைவிடவும் இலக்கணையிடம் மிகுந்த பற்று உண்டாகிறது என்றும் அவர் விளக்கினார் (145-150).

 நாகதத்தை: வற்சைநாட்டு அரசன் சுபசந்திரன், சுகாவதி ஆகியோரின் இளையமகள்; ஏழாவது பிறந்தவள் (123).

 நாகவசு: வீதசோகபுரத்து வணிகன் ஒருவனுக்கும் வசுமதி என்பாளுக்கும் பிறந்த மகள். இவள் நாகதத்தனை மணந்து இன்புற்றாள்.