பக்கம் எண் :

17

Kachchik Kalambagam

கல் அடித்தார் - கல் எடுத்து எறிந்த சாக்கியனாரும், சிலை அடித்தார் - வில்லால் அடித்த அருச்சுனனாரும், கண் பறித்தார் முதல் - காளத்தியில் சிவலிங்கத்தின் கண்ணில் குருதி வருவது கண்டு தன் கண்ணைப் பிடுங்கி அப்பிய கண்ணப்ப நாயனாரும் முதலிய, அடியார் - தொண்டர்கள், தொல்லை நிலம் - பழைய நிலவுலகில், பிறவாமே - பிறவாமல், துயர் அறுத்தப் பீட்டினையும் - துன்பத்தை ஒழித்த பெருமையினையும்,

பாற் கடலின் - திருப்பாற்கடலிடத்து, அமுதெழுமுன் - அமுர்தம் தோன்றுவதற்கு முன் (அவ் வமுதத்தோடு) பகைத்து எழுந்த -, ஆலத்திற்கு - நஞ்சினுக்கு, ஏற்க - பொருந்த, இடம்.  அமைத்து -, அமரர்க்கு - வானவர்க்கு, இன்புறச் செய் - இன்பம் உண்டாகும்படி செய்கின்ற, ஊட்டினையும் - அமுதத்தை உண்பித்தலையும்,

கிழக்கு வடக்கு, என்னும் திசைகளின் நிலை வேறுபாடுகளை, அறியாத -, கீழ்மையரும் - கீழ் மக்களும், சிறப்பு எய்தி - சிறப்படைந்து, வழக்கும் இட - தங்கள் கொள்கைகளைக் குறித்துப் போரிடவும், புரி - செய்கின்ற, உணர்வு - அறிவு, வாய்ப்ப அளித்த - வாய்க்கும்படி அளித்த, தீட்டினையும் - கைச்சாத்தினையும்,

(அறிவினரே 3-ம் அடி). அறிபவராம் -, அன்றி - இன்னவாறு என்று நிலைகண்டு தெளியக் கூடியவர்களாவார் அல்லாமல், எம்போல் அறிவற்ற சிறியவர் -, வீடு உறு வகை - பேரின்பம் பெறும் வகை, மற்று இல்லை என்று உணர்ந்து - வேறு இல்லை என்று அறிந்து, எளிது - எளிதாக, காட்சி தரீஇ - காட்சி தந்து, மா கம்பத்தொடும் - மிக்க (உடல்) நடுக்கத்துடன் இறைஞ்சி வழிபாடு செய்ய -, உமையோடு - காமக் கண்ணியாருடன், ஏகம்பத்து - திரு ஏகம்பம் என்னும் தலத்தில், ஒரு மாவின் - ஒற்றை மாமரத்தின் கீழ். இனிது வீற்றிருந் தருள்வோய்!

“பூமேவு” நான்முகன் என்று தொடங்கியது, நூல் மங்கல மொழியால் தொடங்கவேண்டும் என்பது பற்றி. பிரமன் நினது முடியையும் திருமால் நினது அடியையும் தேடியும் காணாத என நிரலே கொள்க.  இது நிரல்நிறை.  திறம் - வரலாறு (ஆபுத்திரன் திறம் என்பது போல) மேவும் - விரும்பி யுறையும். 1 ‘நம்பும் மேவும் நசையாகும்மே’ என்பது சூத்திரம். ஆட்டினையும் - கூத்து ஆடுதலையும்; ஆடுதல் ஆட்டு (ஆடு முதனிலைத் தொழிற் பெயர்) உறையும் மாட்டினையும் = மாடு - பக்கம் (தலைமாடு, கால்மாடு).

1(தொல். சொல் 329)